தமிழ்நாடு, புதுச்சேரியை தொடர்ந்து தெலங்கானா முதல்வரை சந்தித்த நடிகர் விஜய் - பின்னணி என்ன?
நடிகர் விஜய் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவை சந்தித்த புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
பீஸ்ட் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய்யின் 66 வது படத்தை தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கி வருகிறார். தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனாவும், இசையமைப்பாளராக தமனும், முக்கிய கேரக்டர்களில் நடிகர்கள் சரத்குமார், பிரபு, பிரகாஷ்ராஜ், ஷாம், நடிகைகள் சங்கீதா, பிக்பாஸ் சம்யுக்தா, ஜெயசுதா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு குடும்ப கதையில் விஜய் நடிப்பதால் ரசிகர்கள் இப்படத்தை பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இதனிடையே 2 ஆம் கட்ட படப்பிடிப்புக்காக விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் ஹைதராபாத் சென்றுள்ளனர்.
இந்நிலையில் ஹைதராபாத்தில் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவை மரியாதை நிமித்தமாக சந்தித்த புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது. அப்போது விஜய்க்கு சால்வை அணிவித்து வீணை ஒன்றை நினைவு பரிசாக அளித்தார். மேலும் இந்த சந்திப்பின் போது, ராஜ்யசபா உறுப்பினர் ஜோகினா பள்ளி சந்தோஷ் குமார் உடனிருந்தார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், புதுச்சேரி முதலமைச்சர் ரெங்கசாமியை தொடர்ந்து சந்திரசேகர ராவை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.