உழைப்பால் ரசிகர்களின் இதயத்தை தொட்ட தளபதி விஜய்க்கு இன்று 48-வது பிறந்தநாள் - கொண்டாடும் ரசிகர்கள்
தளபதி விஜய் பிறந்தநாள் ஸ்பெஷல்
இன்று தளபதி விஜய்யின் 48வது பிறந்த நாளை ரசிகர் ஆர்வத்துடனும், உற்சாகத்துடன் கொண்டாடி வருகிறார்கள். பல்வேறு சினிமாத்துறையினர் நடிகர் விஜய்க்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் விஜய் தன்னுடைய உழைப்பு திறமையால் தமிழ் சினிமாத்துறையிர் முன்னணி நடிகராக வலம் வந்துக் கொண்டிருக்கிறார்.
இவருக்கென்று ரசிகர் பட்டாளமே உள்ளது. ரசிகர்கள் மட்டுமல்ல, திரைத்துறை சார்ந்த பலரும் விஜயின் பிறந்தநாளுக்கு சில நாட்களுக்கு முன்னரே அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்கத் தொடங்கிவிட்டனர்.
நடிகர் விஜய் 1974-ம் ஆண்டு ஜூன் 22ம் தேதி சென்னையில் பிறந்தார். இவரது இயற்பெயர் ஜோசப் விஜய். இவரது தந்தை எஸ். ஏ. சந்திரசேகர் ஒரு தமிழ் திரைப்பட இயக்குனர். இவரது தாயார் ஷோபா. இவர் ஒரு பின்னணிப் பாடகி. விஜய்க்கு வித்யா என்ற ஒரு தங்கை இருந்தார்.
தங்கை இறப்பு
தங்கை சிறு வயதிலேயே இறந்து விட்டார். வித்யாவின் இழப்பை விஜய்யால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. தங்கையின் இறப்பு விஜய்யை மிகவும் பாதித்தது. குறும்புத்தனமாக இருந்த விஜய் தங்கை வித்யா இறப்புக்குப் பின்பு அமைதியாகி விட்டார்.
சினிமா பயணம்
1994ம் ஆண்டு நடிகர் விஜய் முதன் முதலாக ரசிகன் படம் மூலம் ஹீரோவாக தோன்றினார். இந்த படம் நல்ல வசூலை கொடுத்தது. அந்தப் படத்தின் மூலம் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களை ஈர்த்தார்.
அடுத்தடுத்த படத்தில் நடித்து வந்த விஜய் 1996ம் ஆண்டு நடித்த ‘பூவே உனக்காக’ படம் விஜய்க்கு திரை வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது. பிறகு, ‘காதலுக்கு மரியாதை’ படத்தில் நடித்ததற்காக விஜய்க்கு சிறந்த நடிகருக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருது வழங்கப்பட்டது.
'பகவதி', 'திருமலை', 'கில்லி', 'திருப்பாச்சி','சிவகாசி', 'போக்கிரி' போன்ற படங்களின் வெற்றியால் ஒரு அசாத்தியமான ஆக்ஷன் ஹீரோவாக உருவெடுத்தார். இந்த வரிசையில் 'கில்லி', 'போக்கிரி', 'திருப்பாச்சி' ஆக்ஷன் மட்டுமல்லாமல் காதல், குடும்ப சென்டிமெண்ட், நகைச்சுவை, பாடல்கள் என அனைத்து ஜனரஞ்சக அம்சங்களையும் உள்ளடக்கி அனைத்து வயது ரசிகர்களையும் மகிழ்வித்த பக்கா ஃபேமிலி எண்டர்டெய்னர் படங்களும்கூட. ஆகவே இவை மிகப் பெரிய வசூலைக் குவித்து விஜய்யின் நட்சத்திர மதிப்பைப் பன்மடங்கு உயர்த்தின.
திருமண வாழ்க்கை
நடிகர் விஜய், பிரிட்டனில் பிறந்த இந்து இலங்கைத் தமிழரான சங்கீதா சொர்ணலிங்கத்தை 1999ம் ஆண்டு திருமணம் செய்தார். இவர்களது திருமணம் இந்து மற்றும் கிறித்தவம் ஆகிய இரு முறைப்படி நடைபெற்றது. இவர்களுக்கு ஜேசன் சஞ்சய் என்ற மகனும், திவ்யா சாஷா என்ற மகளும் உள்ளனர்.
உலகளவில் கொண்டாடும் ரசிகர்கள்
புலம்பெயர்ந்த இந்தியர்கள் உட்பட சீனா, ஜப்பான், பிரான்ஸ் ஆகிய நாடுகளில் நடிகர் விஜய்க்கு ரசிகர்கள் ஏராளமாக உள்ளனர். விஜய்யின் படங்கள் 80 நாடுகளில் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய்க்கு அனைத்து தரப்பு ரசிகர்களும் உண்டு.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரிய ரசிகர் படையைக் கொண்டவர் விஜய். வழக்கம்போல், இந்த கொரோனா காலத்திலும் போது நலத்திட்ட உதவி, உணவு வழங்குதல் என பல்வேறு சமூக பணிகளையும் தொடர்ந்து செய்து வந்தார்.
தற்போது சமூக ஊடங்களில் அவரது பிறந்தநாள் ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆகிறது. தமிழ்நாட்டில் மட்டுமின்றி மற்ற மாநிலங்களிலும் விஜய்யின் ரசிகர்கள் தாங்களாகவே உருவாக்கிய போஸ்டர்களை வெளியிட்டு வருகின்றனர்.