பாலியல் வழக்கில் சிக்கிய பிரபல நடிகர் விஜய்பாபு மீது மேலும் ஒரு பெண் புகார் - கேரளாவில் பரபரப்பு
மலையாளத்தில் பிரபல நடிகராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வருபவர் நடிகர் விஜய் பாபு. இவர் மீது இளம் நடிகை ஒருவர் பாலியல் புகார் கொடுத்துள்ள நிலையில், மற்றொரு பெண் புகார் கொடுத்துள்ள சம்பவம் கேரளா சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மலையாளத்தில் பல வெற்றி படங்களை கொடுத்துள்ள நடிகர் விஜய் பாபு, ஃபிரைடே ஃபிலிம் ஹவுஸ் எனும் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.
இவருடைய ‘பிலிப்ஸ் அண்ட் தி மங்கி பென்’ என்ற படம் கேரளா மாநிலத்தின் சிறந்த திரைப்பட விருதை வென்றது.
இந்நிலையில், கடந்த ஏப்ரல் 22-ம் தேதி நடிகர் விஜய் பாபு மீது, இளம் நடிகை ஒருவர் போலீசில் பாலியல் புகார் அளித்தார்.
அந்த புகாரில், விஜய்பாபு தன்னை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், தனக்கு பட வாய்ப்பு தருவதாக கூறி தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
பெண் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையில், அவர் வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க லுக் அவுட் நோட்டீசும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், விஜய்பாபுவின் தயாரிப்பு நிறுவனத்தில் முன்பு பணியாற்றிய மற்றொரு பெண் பாலியல் குற்றச்சாட்டை தற்போது தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து அவர் பேசுகையில், கடந்த ஆண்டு விஜய்பாபுவை சந்தித்தேன். அப்போது, நாங்கள் படத்தை குறித்து பேசிக்கொண்டிருந்தோம். திடீரென்று யாரும் இல்லாத நேரம் பார்த்து, என்னை முத்தமிட முயன்றார். நான் சுதாரித்துக்கொண்டு அங்கிருந்து வெளியேற முயற்சி செய்தேன். அப்போது விஜய்பாபு, என்னை மன்னித்து விடு. இதுபற்றி யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். அதன் பிறகு நான் வேலையை விட்டுவிட்டேன். இப்போது அவர் மீது ஒரு பெண் புகார் கொடுத்துள்ள நிலையில், நானும் இதுபற்றி தெரிவிக்கிறேன். அந்தப் பெண்ணுக்காக குரல் கொடுக்க நான் வந்துள்ளேன்.
இவ்வாறு அப்பெண் தெரிவித்துள்ளார்.
தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றத்தை தனது ஃபேஸ்புக் லைவ்வில் வந்து நடிகர் விஜய் பாபு மறுப்பு தெரிவித்துள்ளார். அந்த நடிகை மிகுந்த மன உளைச்சலில் உள்ளதாக எனக்கு ஏராளமான குறுஞ்செய்திகள் அனுப்பியுள்ளார். அது என்னிடம் உள்ளது. நடிகை தொடர்ந்திருக்கும் வழக்கை எதிர்த்து மான பங்க வழக்கு தொடுக்க போகிறேன் என்று பேசியுள்ளார்.
இந்த வழக்கு தொடர்பாக, விஜய்பாபு முன்ஜாமீன் கேட்டு கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை பரிசீலிக்க மறுத்த ஐகோர்ட்டு, கோடை விடுமுறைக்குப் பின்னர் விசாரிக்க முடிவு செய்துள்ளது.