புதிய சிக்கலில் நடிகர் வடிவேலு: மீண்டும் வரி ஏய்ப்பு - ரசிகர்கள் அதிர்ச்சி
நாடறிந்த நகைச்சுவை நடிகர் வடிவேலு, சென்னை சாலிகிராமத்தில் வசித்து வருகிறார்.கடந்த 2007 ல் அவருக்கு நெருக்கமாக இருந்த சக நகைச்சுவை நடிகர் சிங்கமுத்து ஆலோசனையில் தாம்பரம் அருகே பெருங்களத்தூரில் 3.52 ஏக்கரில் நிலம் ஒன்றை வாங்கினார்.
அதன் பின் சில மாதங்களில் சம்மந்தப்பட்ட இடத்தின் அருகே குடிநீர் வடிகால் வாரிய அலுவலகம் வரவிருப்பதாகவும், எனவே அதை வேறு நபருக்கு விற்றுவிடலாம் என சிங்கமுத்து ஆலோசனை கூறியதாக கூறப்படுகிறது.
அதை ஏற்றுக்கொண்ட வடிவேலு, சிங்கமுத்து கூறியபடி தாம்பரத்தைச் சேர்ந்த சேகர் என்பவருக்கு பொது அதிகார பத்திரம் வழங்கியுள்ளார். அதன் பின் சிங்கமுத்துவும் சேகரும் இணைந்து அந்த இடத்தை தனியார் ஒருவருக்கு ரூ.20 லட்சத்திற்கு விற்றதாக கூறி, அந்த பணத்தை வடிவேலுவிடம் கொடுத்துள்ளனர்.
இதற்கிடையில் 2010ல் வடிவேலு வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடந்தது. அப்போது சில முக்கிய ஆவணங்களை கைப்பற்றிய அதிகாரிகள், அது தொடர்பாக வடிவேலுவிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது பெருங்களத்தூரில் வடிவேலு வாங்கி விற்ற நிலமானது, ரூ.1.93 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டதாகவும், அதற்க ஏன் வரி செலுத்தவில்லை என்று வருமான வரித்துறை அதிகாரிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அதுவரை 20 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானதாக நினைத்த வடிவேலு, தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து உடனே சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார்.
இதைத் தொடர்ந்து நடிகர் சிங்கமுத்து, சேகர் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வழக்கு தொடர்பாக எழும்பூர் மத்திய குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
தற்போது அது தொடர்பான குறுக்கு விசாரணையும் நடந்து வருகிறது. வரி ஏய்ப்பு செய்வதை மறைப்பதற்காக வடிவேலு தங்கள் மீது பழி சுமத்துவதாக சிங்கமுத்து மற்றும் சேகர் தரப்பில் கூறப்பட்டது.
அவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கு தொடர்பாக வடிவேலுவிடம் குறுக்கு விசாரணை மேற்கொள்ள அனுமதி கோரினார். அதன் படி செப்.29ல் வடிவேலு ஆஜராக உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில் நேற்று நீதிபதி நாகராஜ் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞர் செல்வராஜ், ‛வடிவேலு படப்பிடிப்பில் இருப்பதாகவும், அவர் ஆஜராக கால அவகாசம் தருமாறு’ கோரிக்கை வைத்தார்.
அதை எதிர்த்த சிங்கமுத்து தரப்பு வழக்கறிஞர் அறிவழகன், வடிவேலு தரப்பு வழக்கை இழுத்தடித்து வருவதாக வாதாடினார். இதைத் தொடர்ந்து டிச.7 ம் தேதி நீதிமன்றத்தில் வடிவேலு ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார்.