கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டார் நடிகர் வடிவேலு - ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து உருக்கமான பதிவு
கொரோனா பாதிப்பிலிருந்து மீண்ட நடிகர் வடிவேலு வீடு திரும்பியுள்ளார்.
நடிகர் வடிவேலு சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படப்பிடிப்புக்காக லண்டன் சென்றிருந்தார். ஒமைக்ரான் பரவல் அதிகமுள்ள பிரிட்டன் நாட்டிலிருந்து வருபவர்கள் அனைவருக்கும் விதிகள் படி பரிசோதனை செய்ய வேண்டும்.
அதன்படி கடந்த 23 ஆம் தேதி விமானம் மூலம் வந்த அவருக்கு சென்னை விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. தொற்று உறுதி செய்யப்பட்டவுடன் போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் வடிவேலு அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு தீவிர அறிகுறிகள் ஏதும் இல்லை என்ற போதிலும் மருத்துவமனையில் தங்கி சிகிச்சைப் பெற்று வந்தார். இதேபோல் படத்தின் இயக்குநர் சுராஜூக்கும் கொரோனா உறுதியானது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு முழுமையாக குணமடைந்து வடிவேலு வீடு திரும்பியுள்ளார்.
மேலும் மக்கள் ஆசீர்வாதத்தால் கொரோனாவிலிருந்து மீண்டு நான் நலமாக உள்ளேன், மூன்று நாட்கள் தனிமையில் இருக்க மருத்துவர் அறிவுறுத்தியுள்ளனர். மருத்துவமனையில் இருந்தபோது முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் மா.சுப்ரமணியன் ஆகியோர் என்னிடம் நலம் விசாரித்தனர். 'என்னிடம் நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோருக்கு நன்றி’ என்று வடிவேலும் தெரிவித்துள்ளார்.