ஓசியில் சென்ற நடிகர் சூர்யா, ஜோதிகா - முகம் சுழித்த மாணவர்கள்
நடிகர் சூர்யா மற்றும் அவரது குடும்பத்தினரால் மாணவர்கள் நீண்ட நேரம் வெயிலில் காக்க வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கீழடி அருங்காட்சியகம்
சிவகங்கை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள கீழடி அருங்காட்சியகம் கடந்த மாதம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது.
இந்த அருங்காட்சியகம் 2 ஏக்கர் பரப்பளவில் ரூ.18.43 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 2,600 ஆண்டுகளுக்கு முந்தைய 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் உள்ளிட்டவை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.
நாள்தோறும் ஏராளமான மக்கள், திரைப் பிரபலங்கள், வெளிநாட்டவர்கள், ஆராய்ச்சியாளர்கள் எனப் பலரும் அருங்காட்சியகத்துக்கு வருகை தந்து கண்டுகளிக்கின்றனர்.
குடும்பத்தினருடன் சென்ற சூர்யா
இந்த நிலையில் நேற்று காலை நடிகர் சூர்யா, ஜோதிகா மற்றும் அவரது மகள், மகன் உள்ளிட்டோர் கீழடி அருங்காட்சியகத்தை சுற்றி பார்த்ததாக புகைப்படங்கள் வெளியாகின. இதனிடையே நடிகர் சூர்யாவும் தனது ட்விட்டர் பதிவில் புகைப்படங்களை வெளியிட்டு பதிவு போட்டு இருந்தார்.
நேற்று கீழடிக்கு சென்ற சூர்யா மற்றும் அவரது குடும்பத்தினர் கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட்ட போது கேட் பூட்டப்பட்டதால் பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் அருங்காட்சியகத்தின் வெளியே வெளியிலில் காத்திருந்தனர்.
இந்த காட்சிகளை பார்த்த அங்கிருந்த செய்தியாளர் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவல்துறை அதிகாரியிடம் கேட்கவே அவர் காது கேட்காததை போல அங்கிருந்து நைசாக நழுவி சென்றார்.
கொளுத்தும் வெயிலில் காத்திருந்த மாணவர்கள்
பின்னர் அங்கிருந்த பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மரத்தடிகளை நோக்கி சென்று அங்கு நீண்ட நேரம் காத்திருந்தனர்.
கீழடி அருங்காட்சியகம் காலை 10.15 மணி ஆகியும் நடிகர் சூர்யா குடும்பத்தினருக்காக பொதுமக்களுக்கு அனுமதி கொடுக்காமல் வெயிலில் நிற்க வைக்கப்பட்டனர்.
பின்னர் தொல்லியல் துறை அதிகாரிகள் சூர்யாவின் குடும்பத்தினருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர் இதை அடுத்து அவர்கள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.
சுமார் ஒரு மணி நேர காத்திருப்புக்கு பிறகு பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இது குறித்து செய்தியாளர்கள் தொல்லியல் துறை அதிகாரிகளிடம் நடிகர் சூர்யா குடும்பத்தினர் டிக்கெட் வாங்கினார்களா என கேள்வி எழுப்பவே அவர்கள் டிக்கெட் வாங்கிவிட்டு தான் உள்ளே சென்றார்கள் என்று அதிகாரிகள் கூறினார்.
முகம் சுழிக்கும் கல்வியாளர்கள்
செய்தியாளர் அந்த டிக்கெட்டின் நம்பரை சொல்லுங்கள் என்று கேட்கவே அதிகாரிகள் பேந்த பேந்த முழித்தனர். பின்னர் அதிகாரிகள் நடிகர் சூர்யாவுக்கு டிக்கெட் வழங்கப்பட்ட புகைப்படங்களை காட்டினர்.
அவர் பணம் செலுத்தினாரா என்றதற்கு அவர் எம்பியுடன் வந்ததால் பணம் வாங்கவில்லை என்று கூறியதாக சொல்லப்படுகிறது.
நடிகரின் குடும்பத்தினருக்காக பள்ளி மாணவர்களை வாட்டி வதைக்கும் வெயிளில் காக்க வைக்கப்பட்ட சம்பவம் கல்வியாளர்களை முகம் சுழிக்க வைத்துள்ளது.