மண்சோறு சாப்பிட்டவர்கள்என் ரசிகர்களாக இருக்க தகுதியற்றவர்கள் - சூரி ஆதங்கம்
மண்சோறு சாப்பிட்டவர்கள் என் ரசிகர்களே கிடையாது என நடிகர் சூரி வேதனை தெரிவித்துள்ளார்.
நடிகர் சூரி
பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் சூரி, ஐஸ்வர்யா லட்சுமி, ராஜ்கிரண் ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் மாமன். குடும்ப உறவுகளை மையப்படுத்தி இப்படத்தின் கதையை சூரி எழுதியுள்ளார்.
முன்னதாக சூரி கதாநாயகனாக நடித்து வெளிவந்த விடுதலை பாகம் 1, விடுதலை பாகம் 2, கொட்டு காளி, கருடன் உள்ளிட்ட திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது.
ரசிகர்களுக்கு அறிவுரை
இந்நிலையில், மாமன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற அவரது ரசிகர்கள் கோவில் வாசலில் அமர்ந்து அவரது ரசிகர்கள் மண் சோறு சாப்பிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். இதுகுறித்து தற்போது கருத்து தெரிவித்துள்ள சூரி, “ரசிகர்கள் மண்சோறு சாப்பிடுவது மிகுந்த வேதனை அளிக்கிறது.
தவறான செயலை செய்து என்னை வேதனையில் ஆழ்த்திவிட்டீர்கள். படம் ஓட வேண்டும் என்பதற்காக மண்சோறு சாப்பிடுவது முட்டாள்தனமானது. படம் எப்படி இருந்தாலும், மண்சோறு சாப்பிட்டால் ஓடிவிடுமா?
இந்த பணத்தில் 4 பேருக்கு சாப்பாடு, தண்ணீர் வாங்கி கொடுத்திருந்தால் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருப்பேன். மண்சோறு சாப்பிட்டவர்கள், எனது ரசிகர்களாக இருக்க தகுதி இல்லாதவர்கள்” என வேதனை தெரிவித்துள்ளார்.