நடிகர் சிவகார்த்திகேயன் பிறந்தநாள் இன்று - நடிகர் முதல் பாடலாசிரியர் வரை..!
தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக வலம் வரும் சிவகார்த்திகேயனின் பிறந்த நாள் இன்று..அவர் கடந்த வந்த பாதைகளை சற்று விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்.
'கலக்க போவது யாரு?' நிகழ்ச்சியில் போட்டியாளராக தனது பயணத்தைத் தொடங்கியவர் இன்று தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு இன்று 37-ஆவது பிறந்தநாள்.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் பிப்ரவரி 17,1985 ஆண்டு பிறந்தவர் நடிகர் சிவகார்த்திகேயன்.
பள்ளி படிப்பை முடித்துவிட்டு திருச்சியில் உள்ள தனியார் பொறியியல் கல்லுாரியில் கணிணி பொறியியல் பிரிவில் பட்டம் பெற்றார்.
கல்லூரி படிக்கும் காலத்திலேயே மிமிக்ரி கலைஞனாக மேடை ஏறியவருக்கு கிடைத்த முதல் சம்பளம் ஆயிரம் ரூபாய்.
காவல் துறை அதிகாரியான அப்பா இறந்த பிறகு அம்மாவும், அக்காவும் குடும்பத்தை பார்த்து கொண்டதால் அவர்கள் மீது அதீத மரியாதையும் அன்பும் எப்போதும் சிவகார்த்திகேயனுக்கு உண்டு. அதிலும் அக்கா என்றால் பயம் கலந்த மரியாதை உண்டு.
காமெடி ரியாலிட்டி நிகழ்ச்சியின் போட்டியாளராக, தொகுப்பாளராக இருந்து சினிமாவில் நடிகராக காலடி எடுத்து வைத்தவர் இன்று தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என சினிமாவில் தனக்கான இடத்தை அழுத்தமாக பிடித்திருக்கிறார்.
நடிகர் சிவகார்த்திகேயன் வருத்தப்படாத வாலிபர் சங்கம்,மான் கராத்தே,கா்ககிச்சட்டை,லிஃப்ட் உள்ளிட்ட 5 திரைப்படங்களை தயாரித்து பாடல்களை பாடினார்.
பல திறமைகளை கொண்டிருந்த சிவகார்த்திகேயன் பாடலாசிரியாராக ஹிட் பாடல்களை கொடுத்து ரசிகர்கள் பெரும்பான்மை ஆதரவை பெற்றார்.
சமீபத்தில் நடிகர் விஜய் நடிக்கும் 'பீஸ்ட்' படத்தில் அனிருத் இசையில் இவர் எழுதிய 'ஹலமதி ஹபிபோ' பாடல் தான் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சிவகார்த்திகேயன் தான் எழுதும் பாடல்களுக்கு வரும் வருமானத்தை மறைந்த கவிஞர் நா. முத்துக்குமார் குடும்பத்திற்கு கொடுத்து உதவி வருகிறார்.
சிவகார்த்திகேயனின் ஆரம்பகால படங்களான 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' படத்தில் 'தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்' பாடலை எழுதியவர் நா. முத்துக்குமார் என்பது குறிப்பிடத்தக்கது.