"இந்த இடம் நான் நினைத்துப் பார்த்திராத நிஜம்" - நடிகர் சிவகார்த்திகேயன் உருக்கம்

sivakarthikeyan 10 year completion cinema journey
By Swetha Subash Feb 03, 2022 12:27 PM GMT
Report

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன் அவருடைய 10 ஆண்டு சினிமா பயணத்தை பற்றி நெகிழ்ச்சியோடு அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தன் பயணத்தை தொடங்கி பிறகு சினிமாவில் நடிகராக அடி எடுத்து வைத்து தற்போது முன்னணி நடிகராக உயர்ந்திருப்பவர் சிவகார்த்திகேயன்.

அவர் சினிமாவில் நுழைந்து இன்றோடு பத்தாண்டுகள் நிறைவடைந்துள்ளன. இவர் மெரினா படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி இன்றுடன் 10 ஆண்டுகள் முடிவடைந்துள்ளது.

இதனை குறித்து விரிவான விளக்கத்தை நடிகர் சிவகார்த்திகேயன் அறிக்கையாக வெளியிட்டுள்ளார்.

அதில், ”நம்பிக்கையை மட்டுமே மூலதனமாகக் கொண்டு துவங்கியது இந்தப் பயணம். இன்று உங்கள் இல்லங்களிலும் இதயங்களிலும் நீங்கள் எனக்கு அளித்திருக்கும் இந்த இடம் நான் நினைத்துப் பார்த்திராத நிஜம்.

இந்த தருணத்தில் எனக்கு முதல் பட வாய்ப்பளித்த இயக்குனர் பாண்டிராஜுக்கும், அத்தனை தயாரிப்பாளர்களுக்கும் உடன் நின்று பயணித்த இயக்குனர்களுக்கும் தன்னோடு சேர்த்து என்னையும் மிளிரச் செய்த என் சக கலைஞர்களுக்கும்,

என் படங்களில் பணியாற்றிய அத்தனை தொழிலாளர்களுக்கும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும், நண்பர்களுக்கும், அனைத்து சினிமா ரசிகர்களுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

எல்லாவற்றிற்கும் மேலாக, என் தாய்த் தமிழுக்கும், என்னை மகனாக, சகோதரனாக, நண்பனாக, குடும்பமாக ஏற்றுக்கொண்ட தமிழ் மக்களுக்கும்,

என் ஆரம்பகாலம் முதல் என்னுடைய வெற்றி - தோல்வி அனைத்திலும் உடனிருந்து என்னை கொண்டாடும் ரசிகர்களான என் சகோதர, சகோதரிகளுக்கும் பெரும் நன்றிகள்.

எப்போதும் நான் செய்ய நினைப்பதெல்லாம் இன்னும் கடினமாக உழைத்து உங்களை மகிழ்விப்பதும், நீங்கள் எனக்கு அளித்திருக்கும் இந்த வாழ்வை பிறருக்கும் பயன்படுமாய் வாழ்வதும் மட்டுமே!!

என் இதயத்தின் ஆழத்தில் இருந்து அன்பும் நன்றிகளும்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.