போலீசாரிடம் பகிரங்க மன்னிப்பு கேட்ட நடிகர் சித்தார்த் - என்ன நடந்தது?
சாய்னா நேவால் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த விவகாரத்தில் நடிகர் சித்தார்த் போலீசாரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
கடந்த ஆண்டு இறுதியில் பஞ்சாப்பில் பிரதமர் மோடியின் பாதுகாப்பு விதிகள் மீறப்பட்ட விவகாரம் தொடர்பாக பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் பதிவிட்ட கருத்துக்கு எதிராக நடிகர் சித்தார்த் ஆபாசமாக கருத்து பதிவிட்டிருந்தார். இவரின் இந்த செயலுக்கு பல்வேறு அரசியல், சினிமா பிரபலங்களும் கண்டனம் தெரிவித்த நிலையில் அவர் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்தார்.
இந்த சம்பவத்தை தேசிய மகளிர் ஆணையமும் கடுமையாக கண்டித்து சித்தார்த்துக்கு நோட்டீஸும் அனுப்பியுள்ளது. சித்தார்த்துக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். நடிகர் சித்தார்த்தை மன்னித்து விட்டதாக பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் ட்விட்டரில் கூறி இருந்தார்.
அதேசமயம் நடிகர் சித்தார்த் மீது தெலங்கானா மாநிலம் ஐதராபாத் போலீசாரும் ஐபிசி் பிரிவு 509 மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 67 ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், சென்னை காவல் துறையிலும் சித்தார்த் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதன்பின்னர் சென்னை போலீசார் நடிகர் சித்தார்த்துக்கு சம்மன் அனுப்பினார்கள். மேலும், அவரிடம் சென்னை போலீசார் விசாரணை நடத்தியதாகவும் தகவல் வெளியானது. இந்தநிலையில் காணொளி மூலம் நடந்த விசாரணையில் சாய்னா நேவால் குறித்து ஆபாசமாக கருத்து பதிவிட்டது தொடர்பான தனது செயலுக்கு சித்தார்த் மன்னிப்பு கேட்டதாக சென்னை காவல்துறை கூறியுள்ளது.