இரத்த புற்றுநோய் பாதிப்பு.., உடல் உறுப்புகளை தானம் செய்வதாக அறிவித்த நடிகர் ஹூசைனி
ஷிஹான் ஹுசைனி 1986ஆம் ஆண்டு வெளியான புன்னகை மன்னன் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர்.
ரஜினி, விஜய் என பல முன்னணி கதாநாயகர்களுடன் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். மதுரையை சேர்ந்த இவர் கராத்தே மாஸ்டரும் ஆவார்.
சினிமா தாண்டி வில் வித்தை பயிற்சியாளராகவும் திகழ்ந்த ஹுசைனி, 400க்கும் மேற்பட்டோருக்கு அதுதொடர்பான பயிற்சிகளை அளித்து வந்தார்.
மேலும், தெலுங்கு சினிமாவின் பவர் ஸ்டாரும், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணும் ஹுசைனின் மாணவர்களாக இருந்துள்ளனர்.
இந்நிலையில் ஹுசைனி சமீபத்தில் வெளியிட்ட வீடியோ அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
அந்த வீடியோவில், இன்னும் சில நாட்கள் தான் உயிரோட இருப்பேன் என்றும், தனக்கு ரத்த புற்றுநோய் ஏற்பட்டிருப்பதாகவும், தினசரி 2 யூனிட் ரத்தம் ஏற்றப்பட்டு வருகிறது. மேலும், மருத்துவர்கள் தன்னை கைவிட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.
இதற்கிடையில் தனது உடலை தானம் செய்வதாக ஹுசைனி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து ஹுசைனி தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மருத்துவம், உடற்கூறியல் மற்றும் ஆராய்ச்சிக்காக எனது உடலை தானம் செய்கிறேன்.
நான் இறந்த 3 நாட்களுக்குப் பிறகு ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனை மற்றும் பல்கலைக்கழகத்திற்கு என் உடலை தானம் செய்ய விரும்புகிறேன்.
இந்த கல்லூரியின் நிறுவனர் ஸ்ரீ ராமசாமி உடையார், எனது இந்திய கராத்தே சங்கத்தின் தலைவராக இருந்தவர்.
என்னுடைய இதயத்தை மட்டும் பாதுகாப்பாக கராத்தே மற்றும் வில்வித்தை மாணவர்களிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இதைப்படிக்கும் கல்லூரியின் அதிகாரி உடனே வந்து, என்னுடைய அதிகாரப்பூர்வ ஒப்புதலையும், எனது கையெழுத்தையும் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
மேலும், தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் மற்றும் தளபதி விஜய் தன்னை வந்து சந்தித்து விட்டு செல்ல வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்திருந்தார்.
கராத்தே ஹுசைனியின் உடல் நிலை பற்றி அறிந்த திரைத்துறையினரும், அரசியல் தலைவர்களும் அவரை நேரில் சென்று சந்தித்து வருகிறார்கள்.
ஹுசைனி, தனக்கு உதவக்கோரி கோரிக்கை விடுத்திருந்த நிலையில், தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய நிதியில் இருந்து ரூ.5 லட்சம் வழங்க துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தினார்.