வட மாநிலங்களில் மதப்புயல்.. தமிழ்நாட்டில் அது மடப்புயல் - நடிகர் சத்யராஜ் பேச்சு!
தமிழ்நாட்டில் எல்லா மதத்தவரும் அண்ணன் தம்பியாக பழகி வருகிறோம் என்று நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார்.
நடிகர் சத்யராஜ்
சென்னையில் திமுக சார்பில் மனிதநேய விழா நடைபெற்றது. இதில் நடிகர் சத்யராஜ் கலந்து கொண்டார். அப்போது மேடையில் பேசிய அவர் "மதப்புயல் தமிழ்நாட்டிற்குள் வர பார்க்கிறது. அதை விட்டுவிடாதீர்கள் என்று இதற்கு முன்பாக பேசிய அருள்மொழி கூறினார்.
அதை நாங்கள் விடமாட்டோம். நாங்கள் இல்லை நாம் விடமாட்டோம். தமிழ்நாட்டில் உள்ள மக்களுக்கு அது தெரியும். வட மாநிலங்களில் உள்ளவர்களுக்குதான் அது மதப்புயல் இங்கே அது மடப்புயல்.
இங்கு எல்லா மதத்தை சேர்ந்தவர்களும் இருக்கிறார்கள். எந்த மதத்தையும் சாராத என்னை போன்றவர்களும், அருள்மொழி போன்றவர்களும் ஒன்றாகத்தான் இருக்கிறோம்.
வளர்ச்சிப் பாதை
தமிழ்நாட்டில் எல்லா மதத்தவரும் அண்ணன் தம்பியாக பழகி வருகிறோம். தந்தை பெரியாரின் தொண்டர் அறிஞர் அண்ணா. அண்ணாவின் தொண்டர் கலைஞரும், எம்.ஜி.ஆரும்.
அவர்களை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் பெரியார் வழி வந்தவர். நமக்குள் நடப்பது பங்காளி சண்டை, இந்த பகையாளியை உள்ளே விட்டு விடக் கூடாது. காமராஜர் தொடங்கி வைத்த மதிய உணவு திட்டத்தை எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டமாக மாற்றினார். அதில் முட்டையை கொடுத்தது கருணாநிதி, அதை சிற்றுண்டியாக மாற்றியது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
அவர் தலைமையில் இயங்கும் இந்த திராவிட மாடல் ஆட்சி தொடர்ந்து நன்மைகளை செய்து கொண்டுதான் இருக்கும். வளர்ச்சிப் பாதையில் தமிழ்நாட்டை அழைத்துக் கொண்டு செல்லும்" என்று தெரிவித்துள்ளார்.