‘நாய் சேகர் தலைப்பு சர்ச்சை’ - வேறு வழியில்லாமல் வைத்ததாக சதீஷ் விளக்கம்
நாய் சேகர் படத்தின் தலைப்பு தொடர்பான சர்ச்சைகளுக்கு நடிகர் சதீஷ் விளக்கமளித்துள்ளார்.
ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் கிஷோர் என்பவர் இயக்கத்தில் காமெடி நடிகர் சதீஷ் ஹீரோவாக நாய் சேகர் திரைப்படத்தில் நடித்துவருகிறார். இதற்கான படப்பிடிப்பு வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இதனிடையே நடிகர் வடிவேலு ரீ-என்ட்ரி ஆகும் படத்திற்கும் நாய் சேகர் எனும் தலைப்பு வைத்துள்ளதாக அவர் கூறியிருந்தார். ஒரே தலைப்பு 2 படத்துக்கும் இருப்பதால் ரசிகர்களுக்கு குழப்பம் ஏற்பட்டது. இதன் தலைப்பை பெறுவது தொடர்பாக ஏ.ஜி.எஸ் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில் அதில் உடன்பாடு ஏற்படவில்லை.
இந்த நிலையில் நாய் சேகர் என்ற தலைப்பை ஏஜிஎஸ் நிறுவனம் சதீஷ் திரைப்படத்திற்கு அதிகாரப்பூர்வமாக அறிவித்து அதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டது. இதனால் வடிவேலு நடிக்கும் படத்திற்கு வேறு பெயர் வைக்கலாமா என படக்குழு ஆலோசித்து வருகிறது.
இந்நிலையில் நடிகர் சதீஷ் அளித்துள்ள பேட்டி ஒன்றில், படம் 2019 ஆம் ஆண்டில் கதை கூறி தொடங்கப்பட்டபோதே இந்த தலைப்பு தான் பொருத்தமாக இருக்கும் என தீர்மானிக்கப்பட்டதாகவும், படத்தில் நாய் ஒன்று முக்கிய கேரக்டரில் படம் முழுவதும் நடித்துள்ளதால் வேறு வழியில்லாமல் இந்த தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.