பிரபல வில்லன் நடிகர் காலமானார் - சோகத்தில் ரசிகர்கள்
பிரபல மலையாள வில்லன் நடிகர் ரிசபாவா உடல்நலக்குறைவால் காலமானார்.
1990 ஆம் ஆண்டில், இயக்குனர் ஷாஜி கைலாஸ் இயக்கத்தில் உருவான, "டாக்டர் பசுபதி" திரைப்படம் மூலம் ரிசபாவா மலையாள திரையுலகில் அறிமுகமானார். இதனையடுத்து 1990 ஆம் ஆண்டு சித்திக் - லால் கூட்டணியில் உருவான 'இன் ஹரிஹர நகர்' படத்தில் ரிசபாவா நடித்த ஜான் ஹோனாய் கதாபாத்திரம் மிகவும் பிரபலமாகி அவருக்கென தனி ரசிகர் கூட்டம் உருவானது.
நடிப்பு தவிர பின்னணிக் குரல் கொடுப்பவராகவும் அறியப்பட்ட 60 வயதான ரிசபாவா கேரள மாநிலம் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் நேற்று பிற்பகல் பக்கவாதம் ஏற்பட்டதை அடுத்து நடிகர் ரிசபாவா உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது இறுதிச் சடங்குகள் கொச்சியில் உள்ள ரிசபாவாவின் சொந்த ஊரான முண்டம்வேலியில் வைத்து நடைபெறவுள்ளது.
ரிசபாவாவின் மறைவுக்கு ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.