எனது உயிர்நாடி கெனிஷாதான்; தெரபிஸ்ட்டாக உதவவில்லை - ரவி மோகன் கடைசி அறிக்கை
என் வாழ்க்கையில் ஒளி கொண்டுவந்தவர் கெனிஷா என ரவிமோகன் குறிப்பிட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ரவி - கெனிஷா
நடிகர் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இருவருக்குமான விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது.
இந்நிலையில் ஐசரி கணேஷ் மகள் திருமண விழாவில், பாடகி கெனிஷாவும் ரவிமோகனும் ஜோடியாக வருகை தந்தனர். இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் வைரலாக பரவியது. தொடர்ந்து ஆர்த்தி ரவி காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
இதற்கு கெனிஷாவும் பதில் தெரிவித்திருந்தார். ஆனால் மெளனம் காத்த ரவி மோகன் தற்போது நீண்ட நெடிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "கெனிஷா பிரான்சிஸைப் பொறுத்தவரை, நீரில் மூழ்கும் ஒருவரைக் காப்பாற்றத் தேர்ந்தெடுத்த ஒரு தோழி அவர்.
என்னை உடைத்துக் கொண்டிருந்த ஒரு வாழ்க்கையிலிருந்து விலகிச் செல்ல தைரியம் மட்டுமே இருந்த எனக்கு, அவர் ஒரு உயிர்நாடியாக மாறினார்.
எனது பணம், வாகனம், ஆவணங்கள், ஏன் எனது அடிப்படை கண்ணியம் கூட பறிக்கப்பட்டு வெறுங்காலுடன் என் சொந்த வீட்டை விட்டு வெளியேறிய போதும் கெனிஷா எனக்காக நின்றார். சூழ்நிலையை உணர்ந்து, தயங்காமல் வந்த ஒரு அழகான துணை அவர்.
குற்றச்சாட்டுக்கு மறுப்பு
என் வாழ்க்கையில் ஒளியை கொண்டுவந்தவர். நான் சட்ட ரீதியாக, உணர்ச்சி ரீதியாக, நிதி ரீதியாக போராடும் அனைத்துப் போராட்டங்களையும் கெனிஷா நேரடியாக பார்த்தார். புகழுக்காகவோ, கவனத்திற்காகவோ அல்லாமல், இரக்கத்துடன் வலிமையுடன் என்னுடன் இருக்க தீர்மானித்தார்.
நான் மகிழ்ச்சியாக இருக்கத் தகுதியானவன் என்பதை எனக்கு நினைவூட்டியதும் அவர் தான். உங்கள் வாழ்க்கையிலும் ஒரு ஒளியைக் காண்பீர்கள் என்று நம்புகிறேன். கெனிஷா எனக்கும், என் பெற்றோருக்கும், என்னைத் தொடர்ந்து வழிநடத்திய என் குழுவினருக்கும் செய்த காரியம் மிகவும் மரியாதைக்குரியது. அவரின் நடத்தையையும் தொழிலையும் அவமதிக்கும் ஒரு சிறிய கிண்டலை கூட நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்.
அவர் ஒரு தெரபிஸ்ட். அதைவிட அவர் அற்புதமான பாடகி. ஆரம்பத்தில் என் கதையைச் சுருக்கமாகக் கேட்ட நிமிடத்தில், எனக்கு ஒரு தோழியாக மட்டும் உதவுவேன் என்றும், தெரபிஸ்ட்டாக உதவ மாற்றேன் என்றும் உறுதியளித்தார். ஏனென்றால், அது சட்டத்திற்கு எதிரானது. மிரட்டி பணம் பறிப்பவர்களின் குடும்பத்துடன் துன்பப்பட்டதை என்னைவிட வேறு யாரும் அதிகமாக புரிந்துகொள்ள முடியாது.
கெனிஷா உடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு நியாயமே இல்லாதவாறு குற்றம் சாட்டப்படுகிறார்கள் என்பதை நான் புரிந்துகொள்கிறேன். ஆனால் எனக்கு உண்மை தெரியும். என்னை அறிந்தவர்களுக்கு என் நன்றி உணர்வு தெரியும். என்னை நீங்கள் மதிக்கிறீர்கள் என்றால், கெனிஷாவுக்கும் அதையே செய்வீர்கள் என நம்புகிறேன். என் வாழ்க்கையை யாரும் அழிக்க முடியாது. நான் என்ன செய்கிறேன் என்று எனக்குத் தெரியும்." எனக் குறிப்பிட்டுள்ளார்.