விஜய்க்கு அரசியல் அவசியமில்லை; அவர் மீது இந்த சந்தேகம் உள்ளது - நடிகர் பார்த்திபன்
விஜய்யின் அரசியல் செயல்பாடு குறித்து நடிகர் பார்த்திபன் கருத்து தெரிவித்துள்ளார்.
விஜய்
தமிழ் சினிமா துறையில் முன்னணி நடிகராக உள்ள விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கி 2026 சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ளார்.
ஒரு பக்கம் தனது கடைசி படத்தில் நடித்து கொண்டிருந்தாலும், மக்களை நேரில் சந்திப்பது, கட்சிக்கு பொறுப்பாளர்களை நியமிப்பது என அரசியலையும் கவனித்து வருகிறார்.
நடிகர் பார்த்திபன்
இந்நிலையில் விஜய்யின் அரசியல் செயல்பாடு குறித்து நடிகர் பார்த்திபனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், நான் எல்லாவற்றையும் கொஞ்சம் பாசிட்டிவாக பார்ப்பேன். நண்பர் விஜய்க்கு அரசியல் என்பது அவசியமே இல்லை. ஏனெனில் அவர் ஒரு பெரிய ராஜாங்கம் நடத்தி வருகிறார். அடுத்த சூப்பர் ஸ்டார், கலெக்ஷன் மன்னர், 200 கோடி சம்பளம் என்றெல்லாம் அவருக்கு கிடைக்கிறது.
இப்படி ஒரு சிம்மாசனத்தை விட்டு விட்டு அவர் எதற்கு மக்கள் பிரச்சனைகளைகளுக்கு குரல் கொடுக்க வேண்டும். அப்படியென்றால், அவர் எதோ நல்லது செய்யவேண்டும் என்று ஆசைப்படுகிறார். மாற்றம் ஒன்று தான் மாறாதது. யார் வேண்டுமானாலும் ஆட்சிக்கு வரலாம். ஏற்கனவே சில நடிகர்கள் அரசியலுக்கு வந்து பின்வாங்கியதில் விஜய்யும் பின்வாங்கி விடுவாரோ என்ற சந்தேகம் உள்ளது.
இப்படித்தான் பேசுவார்கள், அதன் பின்னர் பின்வாங்கி விடுவார்கள் என்ற சந்தேகம் உள்ளது. நம்மளும் ஏன் அந்த சந்தேகத்தை ஊதி பெரிதாக்கி நல்லது செய்ய வருபவரை பயமுறுத்த வேண்டும். அதனால் விஜய் முனைப்புடன் அரசியலில் செயல்படட்டும்" என கூறினார்.