நடிகையின் சொத்து அபகரிக்க முயற்சி - மன்சூர் அலிகான் மீது போலீசில் புகார்
பழம்பெரும் நடிகை கே.டி. ருக்மணியின் சொத்தை அபகரிக்க முயற்சி செய்ததாக நடிகர் மன்சூர் அலிகான் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.
தமிழ் சினிமாவில் அனைவராலும் அறியப்பட்டவர் நடிகர் மன்சூர் அலிகான். இவர் பல படங்களில் நடித்திருக்கிறார். இதன் பிறகு, அரசியலில் குதித்த இவர் நாம் தமிழர் கட்சி சார்பாக கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்டார்.
அதன் பிறகு கட்சியிலிருந்து விலகினார். கடந்த சட்டபேரவைத் தேர்தலில் தொண்டாமுத்தூர் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த பிறகு, தேர்தலில் போட்டியிடாமல் விலகிக்கொண்டார்.
இந்நிலையில், மறைந்த பழம்பெரும் நடிகை கே.டி. ருக்மணி. இவர் தமிழின் முதல் ஆக்ஷன் ஹீரோயினாவார். இவரது சொத்துக்களை நிர்வகிக்க, உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இடைக்கால நிர்வாகியை நியமித்து, தமிழ்நாடு அரசின் சொத்தாட்சியர் கடந்த 1996ம் ஆண்டு உத்தரவிட்டார்.
அதன்படி ருக்மணிக்கு சொந்தமாக சென்னை தி. நகர் பத்மநாபன் தெருவில் இருக்கும் கட்டடம் ஒன்றை பராமரிப்பது, அதனை வாடகைக்கு விட்டு வாடகை வசூலிப்பது, அத்துமீறி நுழைபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது போன்ற பல பணிகளை இடைக்கால நிர்வாகி செய்து வந்தார்.
இந்நிலையில், அந்த சொத்தை ஆய்வு செய்வதற்காக இடைக்கால நிர்வாகி அங்கு சென்றபோது 10 பேர் அந்த இடத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளது தெரியவந்தது.
அதுமட்டுமின்றி, ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றிவிட்டு கட்டடத்தின் ஒரு பகுதியை இடித்துவிட்டு மன்சூர் அலிகான் மாற்றங்கள் செய்வதற்கு முயற்சி செய்தது தெரியவந்தது. இதனையடுத்து சொத்தாட்சி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், “உயர் நீதிமன்ற உத்தரவுப்படி நிர்வகிக்கப்படும் சொத்தை சேதப்படுத்துவது கண்டனத்திற்குரியது. சட்ட ரீதியான நடவடிக்கைக்கு உட்பட்டது எனவே மன்சூர் அலி கான் மிது தி. நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது” என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.