Cauvery issue: தண்ணி தராம.. ஒரே நாடு, ஒரே வெங்காயம்னு பேசுறீங்க - கடுப்பான மன்சூர் அலிகான்!
நடிகர் மன்சூர் அலிகான் காவிரி நீர் விவகாரம் குறித்து பேசியுள்ளார்.
காவிரி நீர் விவகாரம்
காவிரி நீர் பிரச்சனை நூற்றாண்டுகள் கடந்தும் இன்றும் தீர்க்க முடியாத பிரச்சனையாகவே இருந்து வருகிறது. தற்போது காவிரி நீர் பிரச்சனை மீண்டும் தலை தூக்கி உள்ளது. தமிழகத்திற்கு 3000 கனஅடி தண்ணீர் திறக்க காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை செய்தது.
அந்த உத்தரவை காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உறுதி செய்து உத்தரவிட்டது. இந்நிலையில் கர்நாடக மாநிலத்திற்கே தண்ணீர் இல்லாத நிலையில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கக் கூடாது என, கர்நாடகாவில் பல போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
இதில் கர்நாடக விவசாயிகள், எதிர்க்கட்சியினர், திரைப்பட நடிகர்கள் என பலர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இதுகுறித்து தமிழ் திரைப்பட நடிகர் மன்சூர் அலிகானிடம் "காவிரி விவகாரத்தில் உங்களுடைய நிலைப்பாடு என்ன? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
மன்சூர் அலிகான் பேட்டி
அப்போது பேசிய மன்சூர் அலிகான் "தண்ணீர் என்பது உலக பொதுமறை போன்றது. உயரமாக ஒரு இடத்தில் பிறக்கும் தண்ணீர், கடலில் சென்று கலக்கும் வரையில், அது நாடு, ஊரு, மொழி, மாநிலம், அங்குள்ள விலங்குகள், ஜீவராசிகள், மனிதர்கள் என அனைவருக்கும் பொதுவானதுதான் தண்ணீர்.
அதை வைத்து அரசியல் செய்வது அயோக்கியத்தனம், மடத்தனம், முட்டாள்தனம். இதை அனைவரும் செய்து கொண்டிருக்கிறார்கள். கர்நாடகாவில் உள்ள எல்லா அணைகளிலும் தகதகவென தண்ணீர் மிதக்கிறது. அதிலிருந்து ஒரு சொட்டு கூடு தரமுடியாது என்று சொல்வது தவறானது. பின்னர் ஒரே நாடு, ஒரே வெங்காயம் என எதற்கு பேசுகிறீர்கள்? என்று மன்சூர் அலிகான் பேசியுள்ளார்.