படப்பிடிப்பில் பிரபல நடிகர் ‘கொச்சி நாகேஷ்’ மரணம் - திரையுலகினர் அதிர்ச்சி
கொச்சி நாகேஷ்
படப்பிடிப்பு தளத்தில் நடிகர் ‘கொச்சி நாகேஷ்’ திடீரென்று மரணமடைந்த செய்தியைக் கேட்டு திரையுலகினர் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
பிரபல மலையாள திரைப்பட நடிகராக வலம் வந்தவர் வி.பி.காலித் (70). மறைந்த நடிகர் காலித்துக்கு ஷைஜு, ஜிம்ஷி, காலித் ரஹ்மான் என்ற மூன்று மகன்கள் உள்ளனர்.
இவர் சின்னத்திரை தொடர்களிலும், மேடை நாடகங்களிலும் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார். இவரை மக்கள் ‘கொச்சி நாகேஷ்’ என்று அழைப்பர்.
படப்பிடிப்பு தளத்தில் மரணம்
இவர் ஜூட் ஆண்டனி இயக்கும் படத்தில் சமீப சில நாட்களாக நடித்து வந்தார். இப்படத்தின் படப்பிடிப்பு வைக்கோம் பகுதியில் நடந்து வந்தது. இன்று படப்பிடிப்பில் கலந்து கொண்ட காலித், காலை சிற்றுண்டிக்குப் பிறகு கழிவறைக்குச் சென்றார். நெடுநேரம் ஆகியும் அவர் திரும்பி வரவில்லை. இதனால், சந்தேகமடைந்த சிலர் கழிவறைக்குச் சென்று பார்த்தனர். அப்போது அவர் சுயநினைவின்றி கழிவறையில் விழுந்து கிடந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த படக்குழுவினர் உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
திரையுலகினர் இரங்கல்
அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாக சொல்லப்படுகிறது.
மூத்த நடிகர் உயிரிழந்துள்ள சம்பவம் மலையாள திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் மறைவுக்கு நடிகர்கள் மம்மூட்டி, ஆசிப் அலி, நடிகை மஞ்சு வாரியர் உட்பட மலையாளத் திரையுலகினர் இரங்கல் தெரிவித்திருக்கிறார்கள்.