நடிகர் தனுஷ் கைதாக வாய்ப்பு? - கலக்கத்தில் ரசிகர்கள்!
லைசென்ஸ் இல்லாமல் தனுஷ் மகன் யாத்ரா வண்டி ஓட்டிய விஷயம் கடந்த சில நாட்களாக இணையத்தில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
இந்த விஷயத்தில் தனுஷ் கைதாகலாம் என்று பரவும் செய்திகளால் அவரது ரசிகர்கள் கலக்கமடைந்துள்ளனர்.
நடிகர் தனுஷின் மூத்த மகன் யாத்ரா விலையுயர்ந்த R15 பைக் ஓட்டிச் செல்கிற புகைப்படங்களும், வீடியோவும் கடந்த சில நாட்களாக இணையத்தில் சர்ச்சையைக் கிளப்பியது.
தேனாம்பேட்டை பகுதியில் யாத்ரா பைக் ஓட்டிச் செல்கிறார். அவருக்கு உதவியாளராக கூடவே இன்னொருவரும் பைக் ஓட்டி வருகிறார்.
’18 வயது நிரம்பாமல், ஹெல்மெட் கூட போடாமல் இப்படி விலையுயர்ந்த பைக்கை பொதுவெளியில் ஓட்டிப் பழகுவது ஆபத்தானது.
லைசென்ஸ் உரிமம் இல்லாமல், எல் போர்ட்டு மாட்டாமல், ஹெல்மெட் அணியாமல், 18 வயது நிரம்பாமல் இப்படி பைக்கை ஓட்டிச் செல்லும் போது ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் சக வாகன ஓட்டிகளுக்கும் அது சிக்கல்’ எனப் பலரும் விமர்சனம் செய்துள்ளனர்.
இந்தப் பிரச்சினை இணைய வெளியிலும் பூதாகரமாக விவாதிக்கப்பட்டதை அடுத்து யாத்ராவுக்கு ஹெல்மெட் போடாமல் வண்டி ஓட்டியதற்காக ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
இந்த நிலையில், 18 வயதாகாமல் லைசென்ஸ் இல்லாமல் வண்டி ஓட்டினால் வண்டிக்கு சொந்தக்காரருக்கோ அல்லது வண்டியை ஓட்டியவரின் கார்டியனுக்கோ 25,000 ரூபாய் அபராதம் அல்லது மூன்று வருட ஜெயில் தண்டனை என்ற மோட்டார் வாகனச் சட்டம் நடைமுறையில் உள்ளபோது, தனுஷுக்கு இது சிக்கலாக மாறியுள்ளது.
போலீஸார், ரூ.1,000 அபராதமாக வசூலித்ததாக செய்திகள் வெளியாகி இருக்கும் நிலையில், ‘வீட்டின் அருகிலேயே இருக்கும் பள்ளிக்கு காலை நேரத்தில் குழந்தைகளை அழைத்துச் செல்லும் பெண்களையும் விடாமல், வளைத்து வளைத்து அபராதம் வசூலிக்கும் போக்குவரத்துப் போலீஸார். ரஜினியின் பேரனுக்கு மட்டும் ஏன் இப்படி சட்டத்தை வளைத்து வேடிக்கை பார்க்கிறார்கள்? ஏழைகளுக்கு மட்டுமே தனி சட்டமா?’ என்று சமூக வலைதளங்களில் கருத்துக்கள் தெறிக்கின்றன.
யாத்ரா விஷயத்தால் தனுஷ் மீது நடவடிக்கை பாயுமா என ஒரு சிலர் கேள்வி எழுப்பி வரும் நிலையில், இன்னும் சிலர், ‘இல்லாதவர்களிடம் தான் அபராதம் வசூலிப்பார்கள். கோடிகளில் சம்பளம் வாங்கும் இவர்களிடம் ரூ.25,000 அபராதம் வசூலிக்க போலீஸார் தயங்குவது ஏன்?’ என்று கேள்வியெழுப்பி வருகிறார்கள்.