சாலை விபத்தில் மரணமடைந்த பிரபல நடிகர் - ரசிகர்கள் சோகம்
பஞ்சாபி நடிகரும், சமீபத்தில் கடும் சர்ச்சைக்குள்ளானவருமான தீப் சித்து கார் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசின் வேளாண் சட்டத்திற்கு எதிரான டெல்லி எல்லையில் கடந்த 2020 ஆம் ஆண்டு இறுதியில் தொடங்கிய விவசாயிகள் போராட்டம் 2021 ஆம் ஆண்டு குடியரசு தினத்தன்று மிகப்பெரிய அளவில் நடைபெற்றது.
அப்போது டெல்லி செங்கோட்டையில் சில பகுதிகளில் வன்முறை ஏற்பட்ட நிலையில் அங்குள்ள கொடிக்கம்பத்தில் சீக்கியர்களின் புனிதக்கொடி ஏற்றப்பட்டது. இந்தச் சம்பவம் தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் தான் ஈடுபட்டதாக பஞ்சாபி நடிகர் தீப் சித்து ஒப்புக்கொண்டார்.
இந்த விவகாரம் தொடர்பாக கடந்த ஆண்டு பிப்ரவரி 9 ஆம் தேதி தீப் சித்து கைது செய்யப்பட்டார். சுமார் 70 நாள்கள் சிறையில் இருந்த அவரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பின் ஏப்ரல் 17 ஆம் தேதி தீப் சித்து ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
இந்தநிலையில் குண்டிலில் - மனேஷ்வர் - பல்வால் விரைவுச் சாலையில் தீப் சித்தின் நேற்று கார் விபத்துக்குள்ளானது. காரை அவரே ஓட்டி வந்த நிலையில் லாரியில் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் படுகாயமடைந்த தீப் சித்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.