'எனக்கு அது அவமானமாக இருந்தது' - உணர்ச்சிகரமாக பேசிய நடிகர் சிரஞ்சீவி
தெலுங்கில் நடிகர் சிரஞ்சீவி நடித்துள்ள ‘ஆச்சார்யா’ படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், அதன் புரொமோஷன் விழாவில் கலந்துகொண்டு உணர்ச்சிகரமாக பேசினார் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் சிரஞ்சீவி.
“1988ல் நாகபாபுவை வைத்து ருத்ரவீணை என்ற படத்தை தயாரித்தேன். இது தேசிய ஒருமைப்பாடு குறித்த சிறந்த திரைப்படத்திற்கான நர்கிஸ் தத் விருதை வென்றது. விருதைப் பெற நாங்கள் டெல்லி சென்றோம். விருது வழங்கும் விழா மாலையில் இருந்தது.
அதற்கு முன் ஹாலில் தேநீர் அருந்திக் கொண்டிருந்தோம். எங்களைச் சுற்றியுள்ள சுவர்களில் இந்திய சினிமாவின் பிரம்மாண்டத்தை வெளிப்படுத்தும் சுவரொட்டிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. அதில் இந்தி நடிகர்கள் அமிதாப் பச்சன், ராஜேஷ் கன்னா, தர்மேந்திரா, பிருதிவிராஜ் கபூர், ராஜ் கபூர், திலீப் குமார், தேவ் ஆனந்த் மற்றும் பலரின் புகைப்படங்கள் அழகாக இருந்தன.
தென்னிந்திய சினிமாவைப் பற்றியும் இவ்வளவு விரிவாக சுவர்களில் காட்டப்படும் என்று நினைத்தோம். ஆனால் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா நடனம் ஆடுவது போன்ற ஸ்டில் படம் மட்டும் காட்டப்பட்டது. அதனுடன் மலையாள நடிகர் பிரேம் நசீரின் படங்களும் இருந்தன. அவ்வளவுதான். இது தான் தென்னிந்திய சினிமா என்று வர்ணிக்கப்பட்டிருந்தது.
டாக்டர் ராஜ்குமார், விஷ்ணுவர்தன், என் டி ராமாராவ், ஏ நாகேஸ்வர ராவ் மற்றும் சிவாஜி கணேசன்.., ஆகியோர் எங்களுக்கு தேவதைகளாக இருந்தனர். ஆனால், அவர்களின் படங்கள் எதுவும் அங்கே இல்லை. எனக்கு அது அவமானமாக இருந்தது. நான் மிகவும் வருத்தமாக உணர்ந்தேன். இந்தி சினிமாவை மட்டுமே இந்திய சினிமாவாக முன்னிறுத்தினார்கள்.
மேலும் மற்ற தொழில்களை பிராந்திய மொழி சினிமா என்று ஒதுக்கிவிட்டார்கள். அதன் பங்களிப்பை அங்கீகரிக்க கூட அவர்கள் கவலைப்படவில்லை. ஆனால், இப்போது பாகுபலி 1, பாகுபலி 2 மற்றும் ஆர்ஆர்ஆர் போன்ற படங்கள் தெலுங்கு சினிமாவை பெருமைப்படுத்தியுள்ளன.
பல வருடங்களுக்குப் பிறகு, இன்று நான் மிகவும் பெருமையாக உணர்கிறேன், என்னால் என் மார்பைத் தட்ட முடிகிறது. நாம் இனி ஒரு பிராந்திய சினிமா இல்லை என்பதை எங்கள் துறை நிரூபித்தது.
தெலுங்குத் திரையுலகம் இந்தத் தடைகளை நீக்கி இந்திய சினிமாவின் ஒரு அங்கமாக மாறியுள்ளது. நமது வெற்றியைக் கண்டு அனைவரும் வியப்படைகின்றனர். பாகுபாடுகளைக் கடந்துவிட்டோம். பாகுபலி, பாகுபலி 2 மற்றும் ஆர்ஆர்ஆர்-க்கு நன்றி”.