மலை கிராம மக்களுக்கு ஆம்புலன்ஸ் - நடிகர் பாலாவின் நெகிழ்ச்சி செயல்!
மூன்றாவது முறையாக மலை கிராம மக்களுக்கு ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்துள்ளார் நடிகர் பாலா.
நடிகர் பாலா
பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் காமெடி நிகழ்ச்சிகளில் மக்களை சிரிக்கவைத்து வருபவர் நடிகர் பாலா. மேலும் பல திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் ஆதரவற்றவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி வருகிறார்.
இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் அறந்தாங்கி பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்றை வழங்கினார். இதனையடுத்து ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கடம்பூர் மலை கிராமத்தில் உள்ள 300க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த மலை கிராம மக்கள் பயன்படுத்தும் விதமாக ரூ.10 லட்சம் மதிப்பில் ஆம்புலன்ஸ் சேவையினை வழங்கினார்.
ஆம்புலன்ஸ்
இந்நிலையில் தற்போது ஈரோடு மாவட்டம் பர்கூர் மலை பகுதிக்கு உட்பட்ட சோளகனை மலை கிராமத்தில், மலைக்கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று, நடிகர் பாலா ரூ.5 லட்சம் மதிப்பில் இலவச ஆம்புலன்ஸ் வாங்கிக் கொடுத்துள்ளார்.
ஆம்புலன்ஸ் வழங்கும் நிகழ்ச்சியில் நடிகர் பாலா மற்றும் நடிகர் அமுதவாணன், தன்னார்வலர் அமைப்பை சேர்ந்த மக்கள் ராஜன் உள்ளிட்ட தன்னார்வலர்கள் மற்றும் மலை கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.
மேலும், மலைக் கிராமத்தைச் சேர்ந்த 125 விவசாயிகளுக்கு., மண்வெட்டி, கடப்பாரை, கூடை உள்ளிட்ட வேளாண் உபகரணங்களும் வழங்கப்பட்டது. மலை கிராம மக்கள் தங்களது பாரம்பரிய இசை வாசித்தும், நடனமாடியும் நடிகர் பாலா வழங்கிய ஆம்புலன்சை உற்சாகமாக வரவேற்றனர்.