ஈரோடு இடைத்தேர்தல் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் நடிகர் பாக்கியராஜ் போட்டி?
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஓபிஎஸ் தரப்பில் இயக்குநர் பாக்கியராஜை போட்டியிட வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரோடு இடைத்தேர்தல்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ளது. திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சி மீண்டும் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடுகிறது.
அக்கட்சியின் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளார். அதிமுக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நிலையில் வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை. அதேசமயம் அதிமுக ஓபிஎஸ் அணி, ஈபிஎஸ் அணி என இரு தரப்பாக பிரிந்து தேர்தலை சந்திக்க உள்ளது.
ஓபிஎஸ் தரப்பில் பாக்கியராஜ்
தற்போது சின்னம் பிரச்சனையால் வேட்பாளரை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ள நிலையில், இடைத்தேர்தலில் நடிகர் மற்றும் இயக்குநர் பாக்கியராஜை போட்டியிட வைப்பதற்கு ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் பாக்கியராஜ் கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர் என்பதாலும், ஈரோடு பகுதி மக்கள் மத்தியில் செல்வாக்கு மிக்கவர் என்பதாலும் அவரை களம் இறக்கினால் நன்றாக இருக்கும் என்று கருதுகிறார்கள்.
பேச்சுவார்த்தை
இதனால் இடைத்தேர்தலில் போட்டியிட பாக்கியராஜை சம்மதிக்க வைக்க ஓ.பன்னீர் செல்வம் தரப்பு மூத்த தலைவர்கள் தொடர்ந்து பேசி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது, ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை