பிரபல நடிகர் திடீர் மரணம் - துக்கம் தாளாமல் 3 வாரத்தில் தாயும் உயிரிழந்த சோகம்!
கடந்த சில வாரங்களுக்கு முன் உடல்நலக் குறைவால் மரணமடைந்த நடிகர் பாபுவின் தாயார் உயிரிழந்துள்ளார்.
நடிகர் பாபு மரணம்
கடந்த 1990ம் ஆண்டு இயக்குநர் பாரதிராஜா இயக்கிய என் உயிர்த் தோழன் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் பாபு. பின்னர் பெரும்புள்ளி, தாயம்மா, பொண்ணுக்கு சேதி வந்தாச்சு உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
இதனையடுத்து ‘மனசார வாழ்த்துங்களேன்’ என்ற படத்தில் நடிக்கும்போது, ஒரு சண்டைக்காட்சியில் மாடியிலிருந்து தவறுதலாக கீழே விழுந்ததில் அவருடைய முதுகுப் பகுதியில் பலத்த அடிபட்டு எலும்பு முறிவு ஏற்பட்டது. இதற்காக அறுவை சிகிச்சை மேற்கொண்டபோதும் நிமிர்ந்து உட்கார கூட முடியாதபடி முடங்கிப்போனார்.
1991ம் ஆண்டு நடந்த இந்தச் சம்பவம் சினிமா கனவுகளுடன் வந்த பாபுவின் வாழ்க்கையையே அப்படியே புரட்டிப் போட்டு விட்டது. அன்று முதல் இன்று வரை பாபுவின் வயதான அம்மா பிரேமா மட்டுமே அவரை உடனிருந்து கவனித்து வந்தார்.
தாயார் மரணம்
இந்நிலையில் நடிகர் பாபு கடந்த மாதம் உடல்நிலை மோசமடைந்து சிகிச்சைகள் பலனளிக்காமல் உயிரிழந்தார். அவரை அறிமுகப்படுத்திய இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்ட சில திரைப்பிரபலங்கள் பாபுவின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
பாபுவின் தாயார் பிரேமா, மகனின் இருப்பாள் மிகவும் மனமுடைந்து போனார். இந்நிலையில், பெற்ற மகனை பறிகொடுத்துவிட்டு சோகத்தில் சாப்பிடாமல் அழுதுகொண்டே இருந்த என் உயிர்த் தோழன் பாபுவின் தாய் பிரேமா உடல்நிலை மோசமாகி உயிரிழந்தார். மகன் இறந்த மூன்றே வாரத்தில் தாயும் உயிரிழந்த சம்பவம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.