திருமண மோசடி புகார்... போலீஸ் கமிஷனரை ரகசியமாக சந்தித்த ஆர்யா
திருமணம் செய்து கொள்வதாக கூறி பண மோசடி செய்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து நடிகர் ஆர்யா சென்னைப் பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவாலை திடீரென சந்தித்து பேசியுள்ளார்.
ஜெர்மனி வாழ் இலங்கையை சேர்ந்த தமிழ் பெண்ணான வித்ஜா நடிகர் ஆர்யா தன்னை காதலித்து ஏமாற்றிவிட்டதாகவும், தன்னிடம் ரூ.70 லட்சம் வரை பண மோசடி செய்துவிட்டதாகவும் குடியரசு தலைவர் அலுவலகம் மற்றும் பிரதமர் அலுவலகத்திற்கு ஆன்லைன் மூலமாக கடந்த பிப்ரவரி மாதம் புகார் அளித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி ஆர்யாவை நேரில் வரவழைத்து விசாரணை நடத்தினர். இதனிடையே ஆர்யா போல் நடித்து ஜெர்மனி பெண்ணிடம் மோசடியில் ஈடுபட்டதாக புளியந்தோப்பை சேர்ந்த முகமது அர்மான் மற்றும் அவரது மைத்துனர் முகமது ஹுசைனி பையாக் ஆகியோரை ஆகஸ்ட் 24 ஆம் தேதி போலீசார் கைது செய்தனர்.
கைதான இருவரும் ஜாமீன் கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் வழக்கை செப்டம்பர் 3 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த ஜெர்மனி பெண்ணின் வழக்கறிஞர் முதல் தகவல் அறிக்கையில் முதல் குற்றவாளியாக நடிகர் ஆர்யா மற்றும் இரண்டாவது குற்றவாளியாக ஆர்யாவின் தாயார் ஜமீலாவின் பெயரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சேர்த்துள்ளதாகவும் அவர்கள் இன்னும் கைது செய்யாமல் இருக்கிறார்கள் என குற்றம் சாட்டினார்.
அதேசமயம் போலீசார் தரப்பில் பாதிக்கப்பட்ட ஜெர்மனி பெண் அளித்த புகாரின் அடிப்படையிலேயே ஆர்யா மற்றும் அவரது தாயார் ஜமீனா ஆகியோரது பெயர்கள் எஃப்ஐஆரில் சேர்க்கப்பட்டதாகவும், விசாரணையில் அவர்களுக்கு இதில் தொடர்பில்லை என்பது தெரியவந்ததால் குற்றப்பத்திரிக்கையைத் தாக்கல் செய்யும் போது ஆர்யாவின் பெயர் நீக்கப்பட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்த நடிகர் ஆர்யா காவல் ஆணையர் சங்கர் ஜிவாலை நேரில் சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.