'என் கவிதைகளின் உயிருள்ள ஒலிப்பேழை அவன்' - மாரிமுத்து மறைவுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல்!

Tamil Cinema Vairamuthu Death Tamil Actors G. Marimuthu
By Jiyath Sep 08, 2023 06:38 AM GMT
Report

நடிகர் மாரிமுத்துவின் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார்.

நடிகர் மாரிமுத்து மறைவு

சின்னதிரையில் எதிர்நீச்சல் தொடரில் ஆதி குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் "இந்தாமா ஏய்" என்ற ஒற்றை வசனத்தின் மூலம் ட்ரெண்டிங் ஸ்டாராக வலம்வந்தவர் நடிகர் மாரிமுத்து (57). இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.

இந்நிலையில் மாரிமுத்து திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்துள்ளார். இன்று காலை ‘எதிர் நீச்சல்’ சீரியல் டப்பிங் பணியில் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென மயக்கமடைந்து விழுந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சக சீரியல் ஊழியர்கள் அருகில் இருந்த சூர்யா ஆஸ்பத்திரிக்கு மாரிமுத்து கொண்டு செல்ல, நெஞ்சு வலி காரணமாக இறந்து விட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

மாரிமுத்துவின் மறைவு அவரின் ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மாரிமுத்துவின் உடல், சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை, அவரது சொந்த ஊரான தேனிக்கு உடல் கொண்டு செல்லப்படவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவரின் உடலுக்கு திரைப் பிரபலங்கள், சீரியல் பிரபலங்கள், சக கலைஞர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

வைரமுத்து இரங்கல்

இந்நிலையில் மாரிமுத்துவின் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டேர் பதிவில் "தம்பி மாரிமுத்துவின் மரணச் செய்தி கேட்டு என் உடம்பு ஒருகணம் ஆடி அடங்கியது.

சிகரத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்தவனை மரணத்தின் பள்ளத்தாக்குவிழுங்கிவிட்டது. என் கவிதைகளின் உயிருள்ள ஒலிப்பேழை அவன். என் உதவியாளராய் இருந்து நான் சொல்லச் சொல்ல எழுதியவன்.

தேனியில் நான்தான் திருமணம் செய்துவைத்தேன் இன்று அவன்மீது இறுதிப் பூக்கள் விழுவதுகண்டு இதயம் உடைகிறேன். குடும்பத்துக்கும் கலை அன்பர்களுக்கும் கண்ணீரைத் துடைத்துக்கொண்டே ஆறுதல் சொல்கிறேன்' என்று வைரமுத்து பதிவிட்டுள்ளார்.