பரம்பிக்குளம்-ஆழியாறு பாசன நீரை கடைமடை வரை சமச்சீராக பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - சீமான் வலியுறுத்தல்!

Seeman
By Jiyath Sep 30, 2023 12:15 PM GMT
Report

பரம்பிக்குளம்-ஆழியாறு பாசன நீரினை கடைமடை வரை சமச்சீராக பகிர்ந்தளிக்க தமிழ்நாடு அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.

சீமான்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ளார் அறிக்கையில் "பரம்பிக்குளம் - ஆழியாறு பாசனத் திட்டத்தில் கிடைக்கப்பெறும் நீரினை பாசனப் பபகுதிகளுக்கு முறையாகப் பகிர்ந்தளிக்காமல் தமிழ்நாடு அரசு அலட்சியம் காட்டிவருவது வன்மையான கண்டனத்துக்குரியது. பாசன நீர் வேண்டி வேளாண் பெருங்குடி மக்கள் வீதியில் இறங்கி போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது மிகுந்த வேதனை அளிக்கிறது.

பரம்பிக்குளம்-ஆழியாறு பாசன நீரை கடைமடை வரை சமச்சீராக பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - சீமான் வலியுறுத்தல்! | Actions Should Taken Distribute Irrigation Water

பெருந்தலைவர் காமராசர் அவர்களால் தொலைநோக்கு பார்வையுடன் தொடங்கப்பட்ட பரம்பிக்குளம் - ஆழியாறு பாசனத்திட்டம் தற்போது ஏறத்தாழ 4.21 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் வெள்ளக்கோவில், காங்கேயம் உள்ளிட்ட கடைமடை பகுதிகளுக்கு பாசன நீர் சென்று சேர உரிய நடவடிக்கை எடுக்காததால் விவசாயப் பெருமக்கள் பெரிதும் பாதிப்புக்கு ஆளாகினர்.

பாசன நீர் வேண்டி பல ஆண்டுகளாக தொடர் போராட்டத்தினை முன்னெடுத்த விவசா யிகள், வேறுவழியின்றி நீதிமன்றத்தின் மூலம் சட்டப்போராட்டத்தினையும் முன்னெடுத்தனர். பாசன நீர் பகிர்வு தொடர்பான வழக்கில் பரம்பிக்குளம் - ஆழியாறு பாசன நீரினை சமச்சீராக 7 நாட்கள் பகிர்ந்தளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகும், இன்றுவரை தமிழ்நாடு அரசு பாசன நீரினை சமமாக பகிர்ந்து அளிக்கவில்லை என்பதுதான் பெருங்கொடுமை.

நா.த.க வலியுறுத்தல்

பெற்ற பிள்ளைகளுக்கு சரிசமமாக உணவளிக்கும், தாயின் கருணை உள்ளத்தை போன்று உலகிற்கு உணவளிக்கும். வேளாண் பெருங்குடி மக்களுக்கு பாசன நீரினை பகிர்ந்தளிக்க வேண்டியது ஓர் அரசின் தலையாய கடமையாகும்.

பரம்பிக்குளம்-ஆழியாறு பாசன நீரை கடைமடை வரை சமச்சீராக பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - சீமான் வலியுறுத்தல்! | Actions Should Taken Distribute Irrigation Water

ஆனால் அதைக்கூட செய்ய மறுத்து பாசன நீரினை குடிநீர் நிறுவனங்களும், குளிர்பான நிறுவனங்களும், தொழிற்சாலைகளும் உறிஞ்சி திருட அனுமதித்து திமுக அரசு வேடிக்கைப்பார்ப்பது வெட்கக்கேடானது. கடைமடை பகுதிகளுக்கு பாசன நீரினை பகிர்ந்தளிக்காமல் இருப்பது, தமிழ்நாட்டிற்கு காவிரி நீரை தரமறுக்கும் கர்நாடக அரசினைப் போன்று சிறிதும் மனச்சான்றற்றச் செயலாகும். தங்களின் வாழ்வாதார உரிமைக்காக பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டு வேளாண் பெருங்குடி தாய்மார்கள் மயக்கமடைந்த செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.

எனது பேரன்பிற்குரிய விவசாயப் பெருமக்கள் தங்களுடைய உடலையும், உயிரையும் வருத்தும் போராட்ட வடிவத்தை தயவுசெய்து மாற்றிக்கொண்டு உரிமைக்கான அறப்போராட்டத்தை முன்னெடுக்க வேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகள் வெல்ல நாம் தமிழர் கட்சி துணைநிற்கும் என்று உறுதியளிக்கிறேன். ஆகவே, தமிழ்நாடு அரசு பரம்பிக்குளம் - ஆழியாறு பாசன நீரினை காங்கேயம், வெள்ளக்கோவில் உள்ளிட்ட கடைமடை பகுதிகளுக்கும் சமச்சீராக பகிர்ந்தளிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.