ஒரே பெயரில் பல மின் இணைப்புகள் - தமிழக அரசு கடும் எச்சரிக்கை
ஒரே வீட்டில் ஒரே பெயரில் பல மின் இணைப்புகள் வைத்திருப்பது தெரியவந்தால் பொறுப்பு அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் எச்சரித்துள்ளது.
பலமுறை அறிவுறுத்தியும் ஒரு வளாகத்தில் ஒரு பெயரின் கீழ் பல இணைப்புகள் சட்டவிரோதமாக வழங்குவது தொடர்ந்து கொண்டே இருப்பதாகவும், ஒரு வளாகத்தில் ஒரே பெயரின் கீழ் உள்ள தாழ்வழுத்த (எல்டிசிடி) மின் இணைப்புகள் குறித்து தொடர் ஆய்வுகளை நடத்துமாறு, பகிர்மானப் பிரிவு தலைமைப் பொறியாளர்களுக்கு மீண்டும் அறிவுறுத்தப்படுவதாகவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் தெரிவித்துள்ளது.
அதேசமயம் பெற்ற இணைப்பை ஒருங்கிணைக்காமலும், உயரழுத்த இணைப்பாக மாற்றாமலும் உள்ள நுகர்வோருக்கு 3 மாத அவகாசம் வழங்கும் வகையில் நோட்டீஸ் அனுப்ப வேண்டும் எனவும், இதுதொடர்பான உயரதிகாரிகளின் ஆய்வின் போது பல இணைப்புகள் ஒரே பெயரின் கீழ் ஒரே வளாகத்தில் இருப்பது தெரியவந்தால் பொறுப்பு அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒவ்வொரு குடியிருப்பிலும் எத்தனை இணைப்புகள் கொடுக்கப்பட்டது என கணக்கெடுப்பதோடு குளிர்சாதன கருவி, குடிநீர் விநியோகம், பொது இடங்களில் பயன்படுத்தும் மின் விளக்குகள், தடையற்ற மின்விநியோகம் செய்யும் கருவி உள்ளிட்டவற்றுக்கு ஒரே வளாகத்துக்குள் தனி இணைப்பு கண்டிப்பாக வழங்கக் கூடாது என்றும் மீண்டும் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களைப் பின்பற்றி ஆய்வு மேற்கொண்டு வாரியத்துக்கு ஏற்படும் வருவாய் இழப்பைத் தடுக்க வேண்டும் எனவும் மிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் குறிப்பிடப்பட்டுள்ளது.