ஒரு முதல்வருக்கு இது அழகா : அண்ணாமலை கேள்வி

BJP K. Annamalai
By Irumporai Jun 16, 2023 05:38 AM GMT
Report

ஒரு முதல்வருக்கு இது அழகா? என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

அமைச்சர் கைது

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது தொடர்பாக நேற்று முதலமைச்சர் முக ஸ்டாலின் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், திமுகவினரை சீண்டி பார்க்க வேண்டாம், எண்களும் எல்லா அரசியலும் தெரியும், இது மிரட்டல் அல்ல, எச்சரிக்கை என பாஜகவை கடுமைய்யாக விமர்சித்து தெரிவித்தார். இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ஒரு முதல்வருக்கு இது அழகா : அண்ணாமலை கேள்வி | Action Only In Case Of Request Annamalai

அதில் : பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, நீதிமன்ற உத்தரவின்படியே செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளார். முதலமைச்சர் முக ஸ்டாலின் வரம்பை மீறி பேசுகிறார். முதல்வரின் பேச்சில் நேர்மை இல்லை, பாஜகவினரை மிரட்டி பார்க்க வேண்டுமென நினைக்கிறார் என்றும் நாங்கள் எதற்கும் தயாராக உள்ளோம், தமிழகத்தில் பழைய பாஜக போல் தற்போது உள்ள பாஜக இல்லை எனவும் பதில் அளித்திருந்தார்.  

அண்ணாமலை கேள்வி  

இந்த நிலையில், முதல்வர் கோரிக்கை விடுத்த வழக்குகளில் ஒன்றில் தான் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தொட்டு பார், சீண்டி பார் என்றெல்லாம் பேசுவது ஒரு முதல்வருக்கு அழகா?, கட்சி மேடைகளிலே, கூட்டம் கலையாமல் பார்த்துக் கொள்வதற்காக, ஒரு சாதாரண மேடைப் பேச்சாளர் பேசும் தொனி. ஆனால், ஸ்டாலின் அவர்களே, நீங்கள் இப்படிப் பேசுவது, நீங்கள் வகிக்கும் முதலமைச்சர் என்ற பதவிக்கு உகந்ததா என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்.

மற்றவர்கள் தவறு செய்தபோது சிபிஐ விசாரணை கேட்ட நீங்கள், தற்போது அனுமதி மறுப்பது ஏன்? என்றும் தமிழகத்தில் எத்தனையோ குற்றங்கள் நடந்த போது கூட வாய் திறக்காத நீங்கள், கரூரில் கடந்த 26ம் தேதி சோதனைக்கு வந்த வருமான வரித் துறை அதிகாரிகள் தாக்கப்பட்டபோது, கண்டனம் கூடத் தெரிவிக்காத நீங்கள், இந்தக் குறிப்பிட்ட வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டவருக்காக இப்படி பொங்குவது நீங்கள் வகிக்கும் பதவிக்கு அழகா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

உங்களுக்கு நினைவிருக்கும் என்று நம்புகிறேன். கடந்த 2016-ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 18ம் தேதி, குளித்தலையில் நடந்த பொதுக் கூட்டத்தில் முதல்வர் நடவடிக்கை எடுக்ககோரிய வழக்கில் தான் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. ஏழு வருடங்களில் என்ன மாறி விட்டது? நீங்கள் கோரிய நடவடிக்கை எடுக்கப்பட்டதை வரவேற்று இருக்கு வேண்டும். சிபிஐ விசாரணைக்கு முன் மாநில அரசின் அனுமதி வேண்டும் என்று அவசர அவசரமாக முடிவெடுத்துள்ளீர்கள்.

5 கட்சிகள் மாறி வந்த ஒருவரை காப்பாற்ற இரண்டாம் கட்ட பேச்சாளர் போல முதல்வர் பேசுவது முறையா?, சட்ட திட்டங்கள், விசாரணை நடைமுறைகள் அனைத்தும் தெரிந்த முதல்வர் இப்படி பேசலாமா? என்றும் எட்டரை கோடி மக்களுக்கான முதல்வரா? குறுகிய வட்டத்திற்கான முதல்வரா என்றும் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், யாரை அச்சுறுத்த இத்தனை ஆவேசமான வார்த்தைகளை பயன்படுத்துகிறீர்கள் எனவும் கேட்டுள்ளார்.