நடிகர்கள் ரஜினி, அஜீத், விஜய் நடிப்பு மிகவும் பிடிக்கும் - மனம் திறந்து பேசிய மு.க.ஸ்டாலின்!
‘ஸ்டாலின் செய்வாரா’ என்ற தனியார் தொலைக்காட்சி நடத்திய நிகழ்ச்சியில் ரஜினி, விஜய், அஜித் ஆகியோர் பற்றி மனம் திறந்து பேசியிருக்கிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். நாளை மறுதினம் தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதிமுக தரப்பில் எடப்பாடி பழனிச்சாமியும், திமுக சார்பில் மு.க.ஸ்டாலினும் முதல்வர் வேட்பாளர்களாக போட்டியிடுகிறார்கள்.
ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள அதிமுக-வும், மீண்டும் ஆட்சியைப் பிடிக்க திமுக-வும் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றன. பாஜக, பாமக ஆகிய கட்சிகள் அதிமுக கூட்டணியிலும், காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட கட்சிகளுடன் திமுக களம் இறங்குகிறது.
இந்நிலையில், ‘ஸ்டாலின் செய்வாரா’ என்ற முன்னணி தொலைக்காட்சியின் நிகழ்ச்சி நடத்தியது. அந்த நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அதில் அரசியல் மற்றும் தனிப்பட்ட விஷயங்களை இளைஞர்கள் சிலர் கேள்வி கேட்டனர்.

இளைஞர்கள் கேட்கும் கேள்விகளுக்கு மு.க.ஸ்டாலின் பொறுமையாக பதில் அளித்து வந்தார். அப்போது, சினிமா படங்களை பார்ப்பீர்களா என்ற இளைஞர் ஒருவர் கேட்ட கேள்விக்கு, “தரமான படங்களை நிச்சயம் பார்ப்பேன். ஸ்டைல் நடிகர் என்றால் அது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை மிகவும் பிடிக்கும். இளைஞர்களைக் கவரக் கூடிய வகையில் நடிப்பதால் விஜய்யை பிடிக்கும். நவரசம் கலந்த நடிப்பால் அஜித்தைப் பிடிக்கும் என்று பேசினார்.