நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் 5 மாநில தேர்தல்...அக்னி பரிட்சைக்கு தயாராகும் பாஜக!!
இந்த ஆண்டின் இறுதியில் நடைபெறவுள்ள 5 மாநில தேர்தலுக்கான தேதியை இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.
5 மாநில தேர்தல்
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக இந்த ஆண்டின் இறுதியில் நாட்டின் 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. ராஜஸ்தான்(நவம்பர் 23-ஆம் தேதி), மிசோரம்(நவம்பர் 7-ஆம் தேதி), மத்திய பிரதேசம் (நவம்பர் 7-ஆம் தேதி), தெலுங்கானா(நவம்பர் 30-ஆம் தேதி) சத்திஸ்கர் (நவம்பர் 7 மற்றும் 17) மாநிலங்களுக்கு நடைபெறவுள்ளன.
இதில் மத்திய பிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சியும், மிசோரம் மாநிலத்தில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் மிசோ தேசிய முன்னணி ஆட்சி நடைபெற்று வருகின்றது. இந்த மாநிலங்களை தவிர்த்து ராஜஸ்தான், சத்திஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியும், தெலுங்கானா மாநிலத்தில் பாரதீய ராஷ்ட்ர சமிதி கட்சியின் ஆட்சி தான் நடைபெற்று வருகின்றது.
அக்னி பரீட்சை
இதில் மத்திய பிரதேசத்தில் முதலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்த போதிலும், அக்கட்சியில் இருந்து அதிருப்தி எம்.எல்.ஏ'க்கள் வெளியேறி பாஜகவிற்கு ஆதரவு தெரிவித்த நிலையில், பாஜகவின் ஷிவ்ராஜ் சிங் சவுகான் ஆட்சி அமைத்தார். அதனை கருத்தில் கொண்ட வரும் சட்டமன்ற தேர்தல் பாஜகவிற்கு பெரிய தடங்கலை காங்கிரஸ் கட்சி ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது.
மறுபுறம் ராஜஸ்தான் மாநிலத்தை எடுத்துக்கொண்டால், அங்கு ஆட்சி செய்து வரும் அசோக் கெல்லட்டின் மீது மக்களுக்கு நேர்மறையான கருத்துக்களே நிலவி வரும் சூழலில் பாஜக கடும் நெருக்கடியை சந்திக்கும் என்பதில் மாற்றமில்லை.
சத்திஸ்கர் மாநிலத்தை பொறுத்தவரையில் ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக ராஜீவ் காந்தி கிசான் நீதி மற்றும் கோதன் நீதி யோஜனா திட்டம், வேலையில்லாதவர்களுக்கு ஊக்க தொகை போன்றவற்றை தாண்டி அம்மாநிலத்தின் முதல்வர் பூபேஷ் பாகேல் OBC வகுப்பினரின் வாக்குகளை பெரிய அளவில் ஈர்த்து வருகிறார். இது காங்கிரஸ் கட்சிக்கு கைகொடுக்கும் என நம்பப்படும் நிலையில், மறுமுனையில் அக்கட்சியில் நிலவும் உள்கட்சி பூசல் பெரிய பின்னைடைவாக அமையக்கூடும். அதனை பாஜக பயன்படுத்த நினைத்தாலும் அங்கே தற்போது ஆம் ஆத்மி கட்சியும் பெரும் வளர்ச்சியை பெற்று வருவதை ஒதுக்கிவிட கூடாது.
தெலுங்கானா மாநிலம் அமைக்கப்பட்டதில் இருந்து தொடர்ந்து 10 ஆண்டுகளாக சந்திரசேகர ராவ் ஆட்சி செய்து வருகிறார். மொத்தமுள்ள 119 இடங்களில் சென்ற முறை அவரது பாரதீய ராஷ்ட்ர சமிதி கட்சி 99 இடங்களை கைப்பற்றி மாபெரும் வெற்றியை பதிவு செய்த நிலையில், மாநிலத்தில் அங்கங்கே அவர் மீது கடும் எதிர்ப்புகளும் எழுத்துள்ளது. ஆனால் இதனை காங்கிரஸ் கட்சியே வெற்றியாக மாற்றிக்கொள்ளும் என கூறப்படுகிறது. இருப்பினும் பாஜகவும் தனது இருப்பை பதிவு செய்ய இம்முறை பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
கடைசியாக சிறிய மாநிலமான மிசோரத்தில் மொத்தமாகவுள்ள 40 இடங்களில் கடந்த முறை 29 இடங்களை கைப்பற்றி மிசோ தேசிய முன்னணி கட்சி ஆட்சியை பிடித்தது. அங்கு தற்போதும் காங்கிரஸ் கட்சிக்கு பெரிய செல்வாக்கு இருக்கும் நிலையில் போட்டி தற்போது மிசோ தேசிய முன்னணி கட்சிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் தான் நீடிக்கிறது. இழந்த ஆட்சியை மீண்டும் கைப்பற்றும் காங்கிரஸ் முயன்று வரும் சூழலில் முதல் முறையை தங்கள் காலை ஆழமாக பதிவு செய்ய பாஜக முயலும் என்பதில் சந்தேகமில்லை.