டிவி சத்தம் அதிகமாக வைத்த முதியவர் மீது ஆசிட் வீச்சு..!
டிவியின் சத்தம் அதிகமாக வைத்து பார்த்து கொண்டிருந்த முதியவர் மீது ஆசிட் வீசியதில் காயம் அடைந்தார்.
கோவை செல்வபுரம் அடுத்த சொக்கம்புதூர் பகுதியை சேர்ந்தவர் சம்பத் (70) .இவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்தார்.
டிவியில் சத்தத்தை அதிகமாக வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவரது வீட்டின் அருகில் வசிக்கும் வீரமணி (30) என்பவர் முதியவரின் வீட்டிற்குள் புகுந்து டிவியின் சத்தத்தை குறைக்குமாறு கூறியுள்ளார். இது குறித்து இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.
தகராறு முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த வீரமணி ஆசிட்டை எடுத்து சம்பத் முகத்தில் வீசியுள்ளார். ஆசிட் முகத்தில் பட்டதை அடுத்து சம்பத் அலறி துடித்துள்ளார்.
இதில் அவரது முகத்தில் வாய் மற்றும் கண் உள்ளிட்ட பகுதிகளில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இதுகுறித்து சம்பத் செல்வபுரம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து வீரமணியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.