கோவையில் அதிர்ச்சி சம்பவம்; வீடு திரும்பிக்கொண்டிருந்த இளம்பெண் மீது ஆசிட் வீச்சு

woman crime acid attack coimbatore attacked threw acid
By Swetha Subash Jan 07, 2022 08:37 AM GMT
Swetha Subash

Swetha Subash

in குற்றம்
Report

கோவையில் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த இளம்பெண் மீது ஆசிட் வீசிய அடையாளம் தெரியாத நபரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர் ஸ்டாலின்- ராதா தம்பதியினருக்கு 2 மகள்கள் உள்ளனர்.

இதனிடையே ராதாவிற்கும் அவரது கணவர் ஸ்டாலினுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு ஏற்பட்டதை தொடர்ந்து கணவரை பிரிந்து 8 மாதங்களுக்கு முன்பு கோவைக்கு வந்தார்.

பின்னர் அம்மன் குளம் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியிருந்து, கட்டிட வேலைக்கு சென்று வந்தார்.

இந்நிலையில் நேற்று மாலை வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பிய ராதா அந்தப் பகுதியில் உள்ள மளிகை கடைக்கு பால் வாங்குவதற்காக சென்றார்.

பின்னர் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். வீட்டின் அருகே ராதா நடந்து சென்று கொண்டிருந்த போது, இருட்டில் மறைந்திருந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ராதாவின் முகத்தில் ஆசிட்டை வீசி தாக்கியுள்ளார்.

பின்னர் அந்த நபர் அங்கு இருந்து தப்பி ஓடி உள்ளார். இதில் ராதாவின் இடது பக்க முகம், தோள்பட்டை, இடது கை ஆகிய இடங்களில் காயம் ஏற்பட்டது.

இதனை பார்த்த அந்த வழியாகச் சென்றவர்கள் ராதாவை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து தகவலறிந்த பந்தய சாலை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பியோடிய நபரை வலை வீசி காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

ஆசிட் வீச்சிற்கு என்ன காரணம்?, தாக்கியது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்பப் பிரச்சனை காரணமாக ஆசிட் வீச்சு தாக்குதல் நடந்ததா?, முன் விரோதம் காரணமா?

அல்லது வேறு எதேனும் காரணமா என்பது குறித்தும் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளில் அந்நபரின் உருவம் பதிவாகியுள்ளதா என்பது குறித்தும் காவல் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

இளம்பெண் மீது ஆசிட் வீசிய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.