தனியார் நிறுவன பேருந்தும் லாரியும் மோதி விபத்து - 20 பேர் காயம்..!
பெங்களூர் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தாமல் அருகே தனியார் நிறுவன பேருந்தும் லாரியும் மோதிய விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 20 க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.
சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்றுக் கொண்டு வருவதால் பல இடங்களில் சாலையை ஒட்டி பள்ளங்கள் வெட்டப்பட்டுள்ளது.
வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் வாகனத்தை ஓட்டினால் மட்டுமே விபத்து ஏற்படாமல் தவிர்க்கலாம் என்ற நிலை உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் தாமல் அருகே பெங்களூர் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் , ஆற்காடு பகுதியில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் தனியார் நிறுவனத்திற்கு பணியாளர்களை ஏற்றிக் கொண்டு வந்த பேருந்தும் அதே மார்க்கமாக சென்ற லாரியும் ஒன்றுக்கொன்று மோதியதில் பேருந்தில் பயணம் செய்த 22 க்கும் மேற்பட்டவர்களுக்கு காயம் ஏற்பட்டது.
காயம்பட்ட அனைவரையும் 108 ஆம்புலன்சில் மீட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
இதில் 2 இளைஞர்களுக்கு மட்டும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.மற்றவர்களுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளது.
பாலுசெட்டி சத்திரம் காவல்துறையினர் போக்குவரத்தை சீர் செய்து, விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.