ஆ.ராசாவின் மன்னிப்பை ஏற்க முடியாது.. கட்சியை விட்டு நீக்குங்கள் - ஹெச்.ராஜா ஆவேசப் பேட்டி!
தமிழக முதல்வர் பிரச்சாரத்தின் போது, ஆ.ராசாவை கடவுள் தண்டிப்பார் என்று கூறி கண்ணீர் விட்டார். இந்த சூழலில் இன்று காலை ஆ.ராசா உளப்பூர்வமாக மன்னிப்பு கோரினார். தற்போது ராசாவின் மன்னிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது என ஹெச்.ராஜா தெரிவித்திருக்கிறார். தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்க நெருங்க தேர்தலில் போட்டியிடும் கட்சிகளுக்குள் வார்த்தைப் போர் வெடித்து வருகின்றன.
முதல்வரின் தாயார் குறித்து ஆ.ராசா பேசிய சர்ச்சைக்குரிய பேச்சு தான் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதற்கு கனிமொழி, ஸ்டாலின் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதனால் கொந்தளித்த அதிமுகவினர் ராசாவின் உருவ பொம்மையை எரித்தும் செருப்பால் அடித்தும் எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள்.
இது குறித்து காரைக்குடியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், திமுகவின் ஆ.ராசா முதல்வரை மட்டும் காயப்படுத்தவில்லை. பெண்ணினத்தையே காயப்படுத்தியிருக்கிறார். யாரை வேண்டுமென்றாலும் இழிவுப்படுத்தி விடலாமா?

அரசியல், கருத்தியல் ரீதியாக பிரச்சினைகளை எதிர்கொள்ள நாங்கள் தயராக உள்ளோம். அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளை விமர்சிப்பதற்கு எந்த விஷயமும் திமுகவிடம் கிடையாது. அதனால் தனிநபர் மீதான தாக்குதலில் இறங்கி இருக்கிறார்கள்.
இது வண்மையாகக் கண்டிக்கக்கூடியது.
ஆ.ராசாவின் விளக்கங்கள், மன்னிப்புகள் அனைத்தும் ஏற்றுக்கொள்ள முடியாது. பெண்மையை ஸ்டாலின் மதிப்பவராக இருந்தால் ஆ.ராசாவை உடனடியாக கட்சியை விட்டு தூக்க வேண்டும். இதை செய்யாவிட்டால் திமுகவுக்கு யாரும் வாக்களிக்க மாட்டார்கள்” என்று பேசினார்.