தஞ்சை பள்ளிகளில் வேகமெடுக்கும் கொரோனா: விதிமுறைகளை மீறிய இரண்டு தனியார் பள்ளிகளுக்கு அபராதம்
தஞ்சை மாவட்டத்தில் பள்ளிகளில் கொரோனாவால் மேலும் 29 மாணவர்கள், ஆசிரியர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 142 ஆக உயர்ந்துள்ளது. மார்ச் 8ம் தேதி தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை பகுதியில் உள்ள பள்ளி மாணவிக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.
அடுத்தடுத்து பல்வேறு பள்ளிகளில் உள்ள மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. தற்போது, தஞ்சை மேக்ஸ்வெல் பள்ளியில் புதியதாக 15 மாணவர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அரசு அறிவித்த கொரோனா தடுப்பு நெறிமுறைகளை கடைபிடிக்காத இரண்டு தனியார் பள்ளிகள் மீது வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்து மாவட்ட ஆட்சியர் கோவிந்த ராவ் நடவடிக்கை எடுத்துள்ளார்.
அதன்படி, கும்பகோணத்தில் உள்ள தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு ரூ.12,000, தஞ்சையில் உள்ள தனியார் பள்ளிக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தஞ்சை பகுதியில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தொடர்ந்து அதிகரித்து வருவது பள்ளிமாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.