இந்திய அணியில் களமிறங்கும் இளம் வீரர் - எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வாரா?
இங்கிலாந்து உடனான டெஸ்ட் தொடரில் களமிறங்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படும் அபிமன்யு ஈஸ்வரன் மீது பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்திய அணி அடுத்ததாக இங்கிலாந்து அணியுடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இதில் காயம் காரணமாக இந்திய அணி வீரர் சுப்மன் கில் விலக, அவருக்கு பதிலாக இந்திய டெஸ்ட் அணி கூடுதலாக பிருத்வி ஷா மற்றும் தேவ்தத் படிக்கல் ஆகியோரை இங்கிலாந்துக்கு அனுப்புமாறு கேட்டது.
ஆனால் பிசிசிஐ அந்த கோரிக்கையை நிராகரித்தது மட்டுமல்லாமல், சுப்மன் கில்லுக்கு பதிலாக புதுமுக வீரர் அபிமன்யு ஈஸ்வரை பயன்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தியது. தேர்வாளர்களும் அபிமன்யூ ஈஸ்வரனை பெரிதும் விரும்புவதாக கூறப்படுகிறது. 25 வயதாகும் வலது கை தொடக்க ஆட்டக்காரரான அபிமன்யு ஈஸ்வரன் உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் பிறந்து மேற்கு வங்க மாநிலத்துக்காக ரஞ்சி கோப்பை உள்ளிட்ட உள்ளூர் போட்டிகளில் விளையாடி வருகிறார்.
2018 -2019 ஆம் ஆண்டு ரஞ்சி சீசனில் மிகவும் சிறப்பாக விளையாடிய அபிமன்யு ஈஸ்வரன், அத்தொடரில் 6 போட்டிகளில் விளையாடி 861 ரன்கள் அடித்து அசத்தினார். அத்தொடரில் அவருடைய சராசரி 95.66 ஆகும். இதனைத்தொடர்ந்து அடுத்த ஆண்டு நடைபெற்ற ரஞ்சி கோப்பையில் மேற்கு வங்க அணியின் கேப்டன் பொறுப்பு கொடுக்கப்பட்டது.
இதனையடுத்து மேற்கு வங்க அணியை ரஞ்சி கோப்பையின் இறுதிப் போட்டி வரை கொண்டு சென்றார் அபிமன்யு. இதுவரை 64 முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள அபிமன்யு ஈஸ்வரன் 43.57 என்ற சராசரியில், மொத்தம் 4401 ரன்கள் குவித்துள்ளார். ஒரு ஆட்டத்தில் அவருடைய அதிகபட்ச ஸ்கோர் 233 ஆகும்.
இதன் காரணமாக அபிமன்யு மீது இந்திய கிரிக்கெட் தேர்வுக் குழுவின் கவனம் திரும்பியது குறிப்பிடத்தக்கது.