சந்தன மரங்கள் மர்ம நபர்களால் வெட்டிக் கடத்தல்- குற்றவாளிகளுக்கு போலீசார் வலை
நாட்றம்பள்ளி அருகே கூட்டுறவு சர்க்கரை ஆலை உற்பத்தி வளாகத்தில் இருந்த மூன்று சந்தன மரங்களை மர்ம நபர்களால் வெட்டிக் கடத்தப்பட்டுள்ளது. குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையை தொடங்கியுள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த, கேத்தாண்டப்பட்டி பகுதியில் கூட்டுறவு சர்க்கரை உற்பத்தி நிலையம் செயல்பட்டு வருகிறது.
இந்நிறுவன வளாகத்தில் இருந்த மூன்று சந்தன மரங்களை மர்ம நபர்கள் கடந்த 19ம் தேதி வெட்டி கடத்தி சென்றுள்ளனர். மறுநாள் காலை வாட்ச்மேன் பல் பகதூர் என்பவர் அவ்வழியாக வந்த போது மரம் சாய்ந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக இது குறித்து உயரதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்.
உயரதிகாரிகள், நாட்றம்பள்ளி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சந்தன மரங்கள் வெட்டிய இடத்தை பார்வையிட்டனர்.
புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வெட்டி கடத்திச் செல்லப்பட்ட சந்தன மரத்தின் மதிப்பு சுமார் ரூ.75 ஆயிரம் என போலீசார் தெரிவித்தனர்.
கூட்டுறவு சர்க்கரை உற்பத்தி ஆலைய வளாகத்தில் இருந்த மூன்று சந்தன மரங்களை மர்ம நபர்கள் வெட்டிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.