சத்து மாத்திரை சாப்பிட்ட 40க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களுக்கு வயிற்று வலி, வாந்தி, மயக்கம் - பெற்றோர்கள் அதிர்ச்சி
சத்து மாத்திரை சாப்பிட்ட 40க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் வயிற்று வலி, வாந்தி, மயக்கம் ஏற்பட்டதன் காரணமாக, உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே பாலி புது காலணி பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படித்து வருகின்றன.
வாந்தி, மயக்கம்
இந்நிலையில், தமிழக அரசு சுகாதாரத்துறை சார்பில் இன்று 6 முதல் 8ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரை வழங்கப்பட்டுள்ளது. இதை சாப்பிட்ட 1 மணி நேரத்திலேயே 40 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு வயிற்றுவலி ஏற்பட்டு பின்பு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது.
மருத்துவமனையில் அனுமதி
இதனை அறிந்த பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பாதிக்கப்பட்ட மாணவர்களை வாகனங்கள் மூலம் அருகிலுள்ள உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் படித்த 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் வயிற்று வலி ஏற்பட்டு மயங்கி விழுந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெற்றோர்களுக்கு ஆறுதல்
இச்சம்பவம் குறித்து தெரிந்த உளுந்தூர்பேட்டை மாவட்ட கல்வி அதிகாரி கலைச்செல்வன் ஒன்றிய கல்வி அதிகாரி மற்றும் வட்டாட்சியர் காவல் துணை கண்காணிப்பாளர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு குழந்தைகளின் பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறினார்கள்.