என் அண்ணனே!எனக்கு வலிக்கிறது..நமக்கிடையேயான பந்தம் தொடரும் - டிவிலியர்சுக்கு கோலி ட்வீட்
உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரும் தென்னாப்பிரிக்க அணியின் முன்னால் கேப்டனுமான ஏபி டிவிலியர்ஸ், அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார்.
இதுதொடர்பாக, தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள டிவிலியர்ஸ், 'இது ஒரு நம்ப முடியாத பயணம். ஆனால், நான் அனைத்து கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன்.
எனது மூத்த சகோதரர்களுடன் விளையாடத் தொடங்கியது முதல் நான் முழு மகிழ்ச்சியுடனும், கட்டுக்கடங்காத உற்சாகத்துடனும் விளையாட்டை விளையாடினேன்.
இப்போது, 37 வயதில் அந்தச்சுடர் அவ்வளவு பிரகாசமாக எரியவில்லை.' என பதிவிட்டிருந்தார். தென்னாப்ரிக்க அணிக்காக விளையாடும்போதே,
கிரிக்கெட் 360* என ரசிகர்களால் கொண்டாட்டப்பட்ட வீரராக இருந்த டிவிலியர்ஸ், ஐபிஎல் தொடரில் ராயல் சாலஞ்சர்ஸ் அணிக்காக விராட் கோலியுடன் விளையாடியபோது இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இன்னும் கொண்டாடினர்.
சில கிரிக்கெட் வீரர்களுக்கு மட்டுமே அவர்களது சொந்த அணிகளை கடந்து பல நாட்டு ரசிகர்களும் ரசிகர்களாக இருப்பார்கள்.
அந்த வரிசையில் டிவிலியர்சின் அதிரடிக்காகவே பல நாடுகளிலும் அவருக்கு ரசிகர்கள் உள்ளனர். விராட் - டிவிலியர்ஸின் பந்தம் கிரிக்கெட்டையும் தாண்டியது.
இருவரும், ஒரே வீட்டைச் சேர்ந்த சகோதரர்களைப் போலவும், நல்ல நண்பர்கள் போலவும் கிரிக்கெட் விளையாடினர்.
இந்நிலையில், டிவிலியர்ஸின் ஓய்வுக்கு ரியாக்ட் செய்த கோலி, 'நம்முடைய காலத்தின் மிகச் சிறந்த கிரிக்கெட் வீரர். நான் பார்த்து உத்வேகம் கொண்ட ஒரு மனிதர்.
நீங்கள் சாதித்ததை நினைத்தும், ஆர்சிபிக்காக பங்காற்றியதை நினைத்தும் பெருமை கொள்ளுங்கள் என் அண்ணனே! இந்த விளையாட்டையும் தாண்டி நம் இருவருக்கும் இடையேயான பந்தம் எப்போதும் தொடரும்.
எனக்கு வலிக்கிறது. எனினும் சரியான முடிவை நீங்கள் எடுத்திருக்கிறீர்கள் என்பதை உணர்கிறேன். ஐ லவ் யூ!' என பதிவிட்டிருந்தார்.