"ஆயிரம் விளக்கு தொகுதி திமுகவின் கோட்டை கிடையாது" - பாஜக வேட்பாளர் குஷ்பு பேட்டி
ஆயிரம் விளக்கு தொகுதி திமுகவின் கோட்டை கிடையாது என்று பாஜக வேட்பாளர் குஷ்பு தெரிவித்துள்ளார். சட்டமன்ற தேர்தலில் முதல்முறையாக நடிகை குஷ்பூ பாஜக வேட்பாளராக போட்டியிடுகிறார். அதுவும் திமுகவிற்கு எதிராக பலம்வாய்ந்த ஆயிரம் விளக்கு தொகுதி குஷ்புவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக குஷ்பு பதிலளித்து பேசுகையில், ”ஆயிரம் விளக்கு தொகுதி திமுகவின் கோட்டை என்பது வரலாறு ஆகிவிட்டது. நான் ஆயிரம் விளக்கு தொகுதியின் முக்கிய பிரச்னைகளை கண்டறிந்திருக்கிறேன். அங்கு பல காலமாக திமுக கோலோச்சியிருந்தாலும், வறுமை குடும்பங்களில் உள்ள குழந்தைகளுக்கு முறையான கல்வி என்பது எட்டாக்கனியாக உள்ளது.

இந்த பிரச்னையை நான் சரிசெய்வேன். நான் ஒரு பெண், ஒரு குடும்பத்தின் பிரச்னைகள் என்னவென்று ஒரு இல்லத்தரசியாக, ஒரு தாயாக எனக்கு நன்றாக தெரியும். நான் தற்போது வசதியான வாழக்கையை வாழ்கிறேன்.
ஆனால் என் சிறு வயது முதல் ஏழ்மை, வறுமையை அறிந்துள்ளேன். அதனால் கல்வி மூலம் குழந்தைகளின் எதிர்காலம் எவ்வாறு மேம்படும் என்பதை அவர்களுக்கு உணர்த்துவேன். கல்வி தேவைகளை பூர்த்திசெய்வேன் என்ற உறுதியுடன் வாக்காளர்களை சந்திப்பேன்” என்றார்.