ஆவின் ஆரஞ்சு பால் விலை உயர்வு – டிடிவி தினகரன் கண்டனம்
உயர்த்தப்பட்ட ஆரஞ்சு பால் விலையைக் குறைப்பதுடன், மற்ற பால் விலையையும் உயர்த்தக்கூடாது என டிடி வி தினகரன் தெரிவித்துள்ளார் .
ஆவின் பால் நிறுவனத்தில் வியாபார நோக்கத்திற்கு விநியோகிக்கப்படும் ஆரஞ்சு நிற பால் லிட்டருக்கு 12 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. லிட்டர் 48 ரூபாயிலிருந்து 60 ரூபாயாக உயர்த்தப்பட்டு இன்று முதல் நடைமுறைக்கு வந்தது.
இந்த நிலையில், இந்த விலை உயர்வு டிடிவி தினகரன் அவர்கள் கண்டனம் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘ஆவின் ஆரஞ்சு பால் விலையை தி.மு.க அரசு திடீரென உயர்த்தியிருப்பது கண்டனத்திற்குரியது.
கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.3 சேர்த்து கொடுப்பதாகக் கூறிவிட்டு, விற்பனை விலையில் லிட்டருக்கு ரூ.12 அதிகப்படுத்தியிருக்கிறார்கள். மற்ற ஆவின் பால் வகைகளின் விலையையும் அடுத்தடுத்து உயர்த்த மக்கள் விரோத தி.மு.க அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
உயர்த்தப்பட்ட ஆரஞ்சு பால் விலையைக் குறைப்பதுடன், மற்ற பால் விலையையும் உயர்த்தக்கூடாது என தி.மு.க அரசை வலியுறுத்துகிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.