ஆவின் பாலில் ஈ இருந்த விவகாரம் : உதவி மேலாளர் சஸ்பெண்ட்
ஆவின் பாலில் இறந்த நிலையில் ஈ இருந்த விவகாரத்தில் உதவி மேலாளர் சிங்காரவேலனை பணியிடை நீக்கம் செய்து ஆவின் பொது மேலாளர் சாந்தி உத்தரவிட்டுள்ளார்.
ஆவின் பால் பாக்கெட்டில் ஈ
மதுரை ஆவினிலிருந்து நாள் ஒன்றுக்கு 5 இலட்சம் பால் பாக்கெட் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. 40 வழித்தடங்களில் பால் பாக்கெட் விநியோகம் செய்யப்படுகிறது,
இந்த சூழலில் மதுரை அடுத்த வடபழஞ்சியில் உள்ள ஆவின் டெப்போவில் நேற்று பால் வாங்கிய பெண் ஒருவரின் பால் பாக்கெட்டில் ஈ மிதந்துள்ளது. இதை டெப்போ முகவரிடம் அப்பெண் ஒப்படைத்தார்.
இதையடுத்து அந்த பாலை டெப்போவில் அந்த வாடிக்கையாளர் திருப்பி ஒப்பைடத்தார். இந்த தகவல் அறிந்து ஆவின் நிறுவன அதிகாரிகள் சம்பந்தபட்ட பால் டெப்போவிற்கு சென்று பால் பாக்கெட்டை திரும்ப பெற்று சென்றனர்.
மேலும் பால் பாக்கெட்டில் ஈ வந்தது எப்படி என விசாரணை நடத்தி வருகிறார்கள். பாலினை பேக்கிங் செய்யும் போது தவறு நடந்திருக்க வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
மதுரை பல்கலை நகர் ஆவின் பாலகத்தில் விற்பனை செய்யப்பட்ட ஆவின் மேஜிக் பால் பாக்கெட்டில் ஈ இருந்ததால் பாலை வாங்கிய நுகர்வோர் புகார் அளித்தார்.
அதிகாரி சஸ்பெண்ட்
பால் பாக்கெட்டில் ஈ இருப்பது குறித்த வீடியோ வெளியான நிலையில் காலி பால் பாக்கெட் சப்ளை செய்யும் பெங்களூரை சேர்ந்த அங்கீத எனும் ஒப்பந்த நிறுவனத்திற்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
பாலை பாக்கெட்டில் அடைக்கும் போது பணியில் இருந்த ஆவின் உதவி மேலாளர் சிங்கார வேலனிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையின் அடிப்படையில் உதவி மேலாளர் சிங்காரவேலனை மதுரை ஆவின் பொது மேலாளர் சாந்தி பணியிடை நீக்கம் செய்தார்.