எங்கள் பிரிவுக்கு அந்த நபர் மட்டுமே காரணம்; இது திட்டமிட்ட சதி - அதிர்ச்சி கொடுத்த ஆர்த்தி
பிரிவுக்கு அந்த 3வது நபர் தான் காரணம் என ஆர்த்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஆர்த்தி அறிக்கை
நடிகர் ரவி மோகன் ஆர்த்தி மீது குற்றம்சாட்டி கடந்த வாரம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். தற்போது அந்த அறிக்கைக்கு பதிலடி கொடுத்து ஆர்த்தி ரவி மீண்டும் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
அதில், எங்களது திருமண வாழ்வு இந்த நிலைக்கு வந்ததற்குப் பணமோ, அதிகாரமோ, பிறர் தலையீடோ அல்லது கட்டுப்பாடோ காரணமல்ல. எங்கள் வாழ்வில் வந்த ஒரு மூன்றாவது நபரே காரணம். எங்களைப் பிரித்தது எங்களுக்குள் இருந்த ஏதோ ஒன்று அல்ல.
வெளியில் இருந்து வந்த ஒருவர் தான். "உங்கள் வாழ்வின் ஒளி" என அறியப்படும் அவர் எங்கள் வாழ்வில் இருளைக் கொண்டு வந்தார் என்பதே உண்மை. இந்த நபர், சட்டப்படி விவாகரத்து ஆவணங்கள் தாக்கல் செய்யப்படும் முன்பே எங்கள் வாழ்கையில் வந்துவிட்டார்.
வாக்குறுதி மீறப்பட்டது..
இதை ஒரு வெற்று குற்றச்சாட்டாக அல்ல மாறாக போதுமான ஆதாரங்களுடன் தான் கூறுகின்றேன். 15 ஆண்டுகள் அவருடைய வாழ்க்கை முன்னேற்றத்திற்காக எனது சொந்த கனவுகள், லண்டனில் பெற்ற முதுகலைப் பட்டம், லட்சியம் என அனைத்தையும் துறந்துவிட்டு வாழ்ந்தேன்.
வாழ்க்கை முழுவதும் என்னுடன் இருப்பதாக உறுதியளித்தார். ஆனால் அந்த வாக்குறுதி மீறப்பட்டது. இத்தனை நெருக்கடியையும் தாங்கிக் கொண்டிருக்கும் என் இரண்டு பிள்ளைகள், எங்கள் வீட்டுப் பெரியவர்கள் மற்றும் என் நண்பர்களுக்கு ஒன்றைக் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.
என்னுடைய இந்த தனிப்பட்ட வேதனையை, பிரச்சனையை இப்படி நான் பொதுவெளியில் இந்த உலகிற்கு எடுத்துக் கூறுவதற்காக என்னை மன்னிக்கவும். இந்தச் சூழ்நிலையில் என் சுயகௌரவத்தை பாதுகாக்கவே இப்படி முயற்சித்துக் கொண்டிருக்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.