ஆரணி தொகுதியில் ரூ.15 கோடி அரசு மானியத்துடன் தொழிற்பேட்டை அமைக்க நடவடிக்கை - சட்டப்பேரவையில் அமைச்சர் தகவல்
இன்றைய தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் சட்டத் துறை, செய்தி மற்றும் விளம்பரத்துறைகளுக்கான மானியக் கோரிக்கை நடைபெற்றது.
அப்போது ஆரணி தொகுதியில் ஒரு சிப்கோ தொழிற்பேட்டை அமைக்க அரசு நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர் சேவூர் எஸ். ராமச்சந்திரன் கோரிக்கை வைத்தார்.
அவரின் கோரிக்கைக்கு பதில் அளித்த குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன்,
திருவண்ணாமலை மாவட்டம், திருவண்ணாமலையில் 15.56 ஏக்கரில் 13 தொழிற்மனைகள் மற்றும், 16 தொழிற்கூடங்களுடன் தொழிற்பேட்டை இயங்கி வருவதாக விளக்கினார்.
பெரியகோள்ப்பாடி கிராமத்தில் 57.18 ஏக்கர் பரப்பளவில் 177 தொழில் மனைகள் கொண்ட புதிய தொழிற்பேட்டைகள் மேம்பாட்டு பணிகள் அரசால் மேற் கொள்ளப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தார்.
முதற்கட்டமாக முப்பத்தி மூன்று தொழில் மனைகள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. தொழில் முனைவோரின் தேவைக்கேற்ப இதர மனைகள் மேம்படுத்தப்பட்டு ஒதுக்கீடு செய்யப்படும். ஆரணி தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் சாலை வசதியுடன் கூடிய தகுதியான நிலம் கண்டறிந்து தெரிவிக்கும் பட்சத்தில் தொழிற்பேட்டை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறினார்.
மேலும், குறைந்தபட்சம் 20 தனியார் தொழில் முனைவோர்கள் சேர்ந்து தகுதியான நிலத்துடன் தொழிற்பேட்டை அமைக்க முன்வரும் பட்சத்தில் அதிகபட்சமாக ரூ.15 கோடி மாநில அரசின் மானியத்துடன் தொழிற்பேட்டை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.