இந்தியா கூட்டணியில் இருந்து ஆம் ஆத்மி விலகலா.? பரபரப்பாகும் டெல்லி நிலவரம்
இந்தியா கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் ஆம் ஆத்மி கட்சி அதிருப்தியின் காரணமாக கூட்டணியில் இருந்து வெளியேறவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியா கூட்டணி
பாஜக அரசை வீழ்த்தும் முயற்சியில் இந்தியாவில் இருக்கும் பலதரப்பட்ட முக்கிய எதிர்கட்சிகளை கூட்டணி அமைத்து தேர்தலுக்கு தயாராகி வருகிறது காங்கிரஸ். அந்த கூட்டணியில் ஆம் ஆத்மி கட்சியும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் இணைந்திருக்கின்றன. மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து அரசியல் செய்து வரும் இவ்விரு கட்சிகளும் கூட்டணியில் இருப்பதும் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
கூட்டணியில் விரிசல்
இன்னும் கூட்டணி உறுதியாகாத நிலையில், தற்போது ஆம் ஆத்மி கட்சி காங்கிரஸ் கட்சி மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், அக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் 18 மாநில கட்சித் தலைவர்களுடன் கலந்து கொண்டனர்.
ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் டெல்லி மாநில தலைவர் அல்கா லம்பா செய்தியாளர்களிடம் கூறும் போது, டெல்லியில் உள்ள 7 மக்களவை தொகுதிகளிலும் போட்டியிட தயாராகும்படி கட்சி தலைமை கூறியதாக தெரிவித்தார்.
ஆம் ஆத்மி மிரட்டல்
இது ஆம் ஆத்மி கட்சிக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஆம் ஆத்மி கட்சித் தலைவர் பிரியங்கா கக்கர், காங்கிரஸ் கட்சி ஆம் ஆத்மியுடன் கூட்டணி அமைக்கக் கூடாது என முடிவு செய்திருந்தால், அடுத்த 'இந்தியா' கூட்டணிக் கூட்டத்தில் ஆம் ஆத்மி கட்சி கலந்து கொள்வதால் எந்தப் பயனும் இல்லை என்று கூறியிருந்தார். மேலும் இனி இந்தியா கூட்டணியின் அடுத்த கூட்டத்தில் கலந்துகொள்வதா? இல்லையா? என்பதை தங்களின் கட்சி தலைமை முடிவு செய்யும் என்றும் கூறியிருந்தார்.
முதிர்ச்சியற்ற செய்தி தொடர்பாளர்
இதனை தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து பேசிய காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் தீபக் பபாரியா, காங்கிரஸ் கட்சியின் கூட்டத்தில் தேர்தல் தொடர்பாக எதுவும் விவாதிக்கப்படவில்லை என்று தெரிவித்து, ஆல்கா லம்பா இதுபோன்ற முக்கியமான விஷயங்களைப் பேசுவதற்கு அங்கீகரிக்கப்பட்ட நபர் அல்ல என்று கூறி,ஆல்கா லம்பாவை 'முதிர்ச்சியற்ற செய்தித் தொடர்பாளர்' என்றும் விமர்சனம் செய்தார்.