ஆம் ஆத்மி கட்சியின் அடுத்த நகர்வு என்ன ?
டெல்லியின் வெற்றியைத் தொடர்ந்து தற்போதைய 5மாநில சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியானது பஞ்சாபில் வெற்றிபெற்றுள்ளது.
`டெல்லி மாடல்' – மூலம் மூன்றாவது தேசிய கட்சியாக ஆம் ஆத்மி உருவாகுமா என்பதைக் குறித்த தொகுப்பைக் காணலாம்.
2012 ஆம் ஆண்டு ஊழலுக்கு எதிராக துவங்கப்பட்ட இந்திய அரசியல் கட்சிதான் ஆம் ஆத்மி கட்சி . சமூக ஆர்வலர் அரவிந்த் கெஜ்ரிவாலால் 26 நவம்பர் 2012ல் தலைநகர் டெல்லியில் தொடங்கப்பட்டது.
ஜன் லோக்பால் மசோதாவைக் கோரி 2011-ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் அண்ணா ஹசாரேவின் ஊழலுக்கு எதிரான இந்தியா எனும் இயக்கத்தை அரசியலாக்க வேண்டும் என்ற சிந்தனையில்
இந்த கட்சியை அரவிந்த் கெஜ்ரிவால் இந்த கட்சியைத் துவங்கினார்.
ஒரு கட்சியை , மாற்றுக்கட்சி என ஆரம்பித்தால் வரும் அத்தனை கேலிகள், எதிர்ப்புகள், போன்றவற்றை மீறி ஆம் ஆத்மி தேர்தலில் போட்டியிட்டு மாநில கட்சிக்கான அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது.
இந்திய தேர்தலில் குறைந்தது மூன்று சதவிகித இடங்களைப் பெற்றாலோ அல்லது மொத்த வாக்குகளில் குறைந்தது 6 சதவிகித வாக்குகளைப் பெறும் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் இந்த அங்கீகாரத்தை வழங்கும்.
அதன்படி டெல்லி சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 28 இடங்களைப் பெற்றதால், அக்கட்சிக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது.
மேலும், தேர்தலில் போட்டியிட பயன்படுத்திய துடைப்பம் சின்னத்தையே, கட்சி சின்னமாக அங்கீகரித்தது.
2014 மக்களவை தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தில் நான்கு இடங்களில் வென்றதால் அங்கும் இக்கட்சிக்கு மாநில கட்சி என்ற தகுதியை தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது.
டெல்லி சட்டமன்றத்துக்கு நடந்த தேர்தலில் இக்கட்சி 28 இடங்களில் வென்றது.
8 இடங்களில் வென்ற காங்கிரஸ் வெளியில் இருந்து ஆதரிப்பதாக ஆளுநருக்கு கடிதம் மூலம் சொன்னதால் ஆம் ஆத்மி ஆட்சி அமைத்தது.
புது தில்லி தொகுதியில் வென்ற அரவிந்த் கெஜ்ரிவால் டிசம்பர் 28, 2013 அன்று முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார் .
அதன் பின் 2015-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் டெல்லியில் 67 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
அதற்கு அடுத்தபடியாக, 2020 ஆன் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 62 தொகுதிகளில் இக்கட்சி வெற்றிபெற்று மீண்டும் டெல்லியில் ஆட்சியை பிடித்தது.
டெல்லி மாடல் மூலம் ,பல திட்டங்களை அறிவித்து, பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் வரை செய்து காட்டினார்.
அதன் பின் விவசாயிகள் போராட்டத்திலும் தனது நிலைப்பாட்டை அவர்களுக்காக உள்ளதை பதிய வைத்ததோடு, பஞ்சாப் மாநில தேர்தலுக்கும் கட்சியை பலப்படுத்த துவங்கினார் அரவிந்த் கெஜ்ரிவால்.
பஞ்சாப் மாநிலத்தின் சட்டப்பேரவை தேர்தல் 2022 இல் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்ற ஆம் ஆத்மி கட்சியானது,
கடந்த 2017 தேர்தலில், 20 இடங்களில் வெற்றிபெற்று பஞ்சாப்பில் எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றது.
தற்போதைய2022ம் ஆண்டு தேர்தலுக்காக 2021-ம் ஆண்டிலிருந்தே தீவிர பிரசாரங்களை மேற்கொண்டார் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால்.
அந்தப் பிரசாரங்களில் `டெல்லி மாடல்' என்பதை முன்வைத்து தடையில்லா மின்சாரம், குடிநீர் வசதியும் செய்து தரப்படும் என கெஜ்ரிவால் மற்றும் கட்சியினர் பிரச்சாரம் மேற்கொண்டனர்.
காங்கிரஸ் ஆட்சிமீது அதிருப்தியிலிருந்த பஞ்சாப் மக்களிடம் எளிதாக அம்மாநில மக்களிடம் சென்று சேர்ந்துள்ளதாக தெரிகிறது.
ஆம் ஆத்மியின் இந்தப் பிரசாரங்களுக்கு இளைஞர்கள் மத்தியில் மட்டுமல்லாமல், எளிய மக்கள் மத்தியிலும் நல்ல பலன் கிடைத்திருக்கிறது.
அதைத்தான் இந்தத் தேர்தல் முடிவுகளும் காட்டுகின்றன.
இந்தியாவில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியமைக்கும் இரண்டாவது மாநிலமாக பஞ்சாப் இருக்கப் போகும் வெற்றியில் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரான ராகவ் சத்தா,
``ஒரு கட்சியாக ஆம் ஆத்மிக்கு இது ஒரு மகத்தான நாள். ஆம் ஆத்மி ஒரு தேசிய கட்சியாக மாறுவதை நான் காண்கிறேன்.
இனி தேசிய அளவில் காங்கிரஸுக்கு, ஆம் ஆத்மி மாற்றுக்கட்சியாக இருக்கும். இன்று நாங்கள் ஒரு தேசிய கட்சியாகிவிட்டோம்.
நாங்கள் இனி மாநில கட்சி அல்ல, தேசிய கட்சி. அரவிந்த் கெஜ்ரிவால் இந்தியாவை பிரதமராக வழிநடத்தும் நாள் விரைவில் வரும்" என்று அறிவித்துள்ளார்.
ஊழலுக்கு எதிராக துவங்கப்பட்ட கட்சியின் ஆட்சி விரிவடைய துவங்கும் வேளையில் தேசிய கட்சிக்கான அங்கீகாரத்தை நோக்கி நகர்வதாக அவர்கள் பேசினாலும்,
அடுத்தடுத்த தேர்தலின் முடிவுகளே அதற்க்கான பாதையை உருவாக்கலாம் என்பதே நிதர்சன உண்மை.