கண்ணை கட்டி இரும்பு கம்பியால் அடித்தனர்! ஆகாஷின் வாக்குமூலம்
சிவகங்கை மானாமதுரையில் 2 பேரை அரிவாளால் வெட்டிய சம்பவத்தில் ஆகாஷ் டெல்ஷன் மற்றும் அவரது நண்பர் கைது செய்யப்பட்டனர்.
ஆகாஷ் டெல்ஷன் பொலிசாரிடம் இருந்து தப்பிக்க முயன்ற போது கால்முறிவு ஏற்பட்டதால் மானாமதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட போது, திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட உயிரிழந்தார்.
பொலிசார் தாக்கியதே ஆகாஷின் மரணத்துக்கு காரணம் எனக்கூறி அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பாக மதுரை உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வரும் நிலையில், அவர் அளித்த வாக்குமூலத்தின் நகல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில், சீருடை அணியாத 10 பொலிசார் வெள்ளை துணியால் கண்ணை கட்டி என்னை மட்டும் ஏற்றி வேறு காரில் அழைத்து சென்றனர்.
அங்கு என்னை உட்கார வைத்து முட்டிக்கு கீழே கெரண்ட காலிற்கு கீழே இரண்டு கற்களை வைத்தனர்.
ஈர சாக்கை காலுக்கு மேல் போட்டு இரும்பு கம்பியால் அடித்தார், எலும்பு முறிவு ஏற்பட்டு ரத்தம் வந்தது வலியால் துடித்தேன்.
பின்னர் கண்கட்டை அவிழ்த்து விட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர், பாலத்தில் இருந்து தவறிவிழுந்துவிட்டதாக கூறச்சொன்னார்கள் என தெரிவித்துள்ளார்.
ஆகாஷின் இந்த வாக்குமூலம் வெளியாகி பரபரப்பை அதிகரித்துள்ளது.