விண்ணை பிளந்த அரோகரா கோஷம்.. கொடியேற்றத்துடன் தொடங்கிய ஆடிப்பூர பிரமோற்சவ விழா!
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பிரசித்திப் பெற்ற விழாக்களில் ஒன்றான ஆடிப்பூர பிரம்மோற்சவ திருவிழா, இன்று அதிகாலை உண்ணாமுலை அம்மன் சந்நிதி எதிரே உள்ள கொடி மரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அதனை தொடர்ந்து அம்மன் சன்னதி முன்பு பராசக்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றப்பட்டது.
ஆடிப்பூர பிரம்மோற்சவ திருவிழா
இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் சுதர்சன், கோவில் அறங்காவலர் குழு தலைவர் இரா.ஜீவானந்தம் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.
10 நாட்கள் நடைபெறும் ஆடிப்பூர விழாவில் தினமும் காலை , மாலை விநாயகர் மற்றும் பராசக்தி அம்மன் மாடவீதி உலாவும், அம்மன் சன்னதி முன்பு தீமிதி விழா நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.